ஒரு வாக்கில் வென்ற திருப்பத்தூர் தொகுதி தவெக வேட்பாளர் சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க தடைகோரி பெரியகருப்பன் வழக்கு: உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு தள்ளிவைப்பு

 

சென்னை: திருப்பத்தூர் தொகுதி தவெக வேட்பாளர் எம்.எல்.ஏ.வாக சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்க கோரி திமுக வேட்பாளர் பெரியகருப்பன் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்கக் கோரி திமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், சிவகங்கை-திருப்பத்தூர் தொகுதிக்கு பதிவான தபால் வாக்கு திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் தொகுதிக்கு அனுப்பப்பட்டதால் அந்த வாக்கை மீட்டு சரிபார்க்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எல்.விக்டோரியா கவுரி மற்றும் என்.செந்தில்குமார் அமர்வு, தபால் வாக்கு வேறு தொகுதிக்கு அனுப்பப்பட்டது குறித்து திமுக வேட்பாளர் அனுப்பிய புகார் மனுவுக்கு பதிலளிக்காதது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்த மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன், இந்த பிரச்னை தொடர்பாக தேர்தல் வழக்கு தான் தொடரமுடியும். நள்ளிரவு வரை வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது எந்த ஆட்சேபமும் தெரிவிக்கப்படவில்லை. முடிவுகள் வெளியிடப்பட்ட பின் தேர்தல் ஆணையத்தின் பணிகள் முடிவடைந்து விட்டது. தபால் வாக்கு வேறு தொகுதிக்கு அனுப்பப்பட்டு விட்டதாகக் கூறுவது கற்பனையானது. தபால் வாக்கு தொகுதி மாறி அனுப்பப்பட்டுள்ளதாகக் கூற எந்த ஆதாரங்களும் இல்லை என தெரிவித்தார். பெரியகருப்பன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, தபால் வாக்கு வேறு தொகுதிக்கு மாறியுள்ளதற்கு ஆதாரம் இல்லை என்பது தவறு. வாக்கு மாறி வந்தது குறித்து தேர்தல் அதிகாரியே தகவல் தெரிவித்திருக்கிறார். தபால் வாக்கு தொகுதி மாறி அனுப்பப்பட்டுள்ளது என்பதை தேர்தல் ஆணையம் மறுக்கவில்லை. தபால் வாக்கு வேறு தொகுதிக்கு அனுப்பப்பட்டிருந்தால் என்ன நடைமுறை பின்பற்ற வேண்டும் என சட்டத்தில் தெரிவிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

 

Related Stories: