பொள்ளாச்சி அருகே விபத்து; கார் மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி

கிணத்துக்கடவு: வால்பாறைக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பும்போது நெகமம் அருகே, கார் மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். சேலம் மாவட்டம், செம்மாண்டம்பட்டியை சேர்ந்தவர் தனபால் (37), இவரது மனைவி மேனகா (35), மகள் அனுஷ்கா (17), மகன் சுர்ஜித் (12), மேனகாவின் அண்ணன் மகள் சினேகா (23). இவர்கள் 5 பேரும் வால்பாறைக்கு சுற்றுலா சென்று விட்டு நேற்று மாலை காரில் சேலம் திரும்பி கொண்டு இருந்தனர். காரை தனபால் ஓட்டினார். கார், பொள்ளாச்சி பல்லடம் ரோட்டில், நெகமம், கே.வி.கே.நகர் அருகே வந்த போது, பல்லடத்தில் இருந்து சோயா லோடு ஏற்றிக்கொண்டு, பொள்ளாச்சி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதியது.

இதில் கார் அப்பளம் போல் நொறுங்கி காரில் இருந்த தனபால், அவரது மனைவி, மேனகா, சினேகா ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியாயினர். மகள் அனுஷ்கா பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். மகன் சுர்ஜித் படுகாயத்துடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த நெகமம் போலீசார், கிருஷ்ணகிரியை சேர்ந்த லாரி டிரைவர் சரவணன் (39) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார் மீது கன்டெய்னர் லாரி மோதி கடற்படை அதிகாரி, சகோதரி பலி
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி தாலுகா மர்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வினித். இவரது மனைவி திவ்யா (30). இவரது தம்பி தீபக் (28) கடற்படையில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் குடும்பத்துடன் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு காரில் புறப்பட்டனர்.

ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை, குருபரப்பள்ளி மேம்பாலம் அருகே நேற்று அதிகாலை 3 மணி அளவில் வந்தபோது, காரின் டயர் திடீரென பஞ்சர் ஆனது. அதை சரி செய்து எடுக்க முயன்றபோது, பின்னால் வேகமாக வந்த கன்டெய்னர் லாரி, காரின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியது. இதில், காரில் பயணம் செய்த திவ்யா, தீபக் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும், உடன் வந்த உறவினர்கள் 7 பேரும் காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: