சென்னை: சென்னை பேசின் பிரிட்ஜ் காவல்நிலையம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. பல ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் இதுபோன்ற சம்பவம் நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புளியந்தோப்பு திருவிக நகர் பகுதியைச் சேர்ந்தவர் சல்மா (43), திருநங்கையான இவரிடம் நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் உள்ளனர். அதில் ஒருவர் தில்ஷா என்ற திருநங்கை. இதுபோல மூலக்கொத்தளம் யானைகவுனியைச் சேர்ந்த விமலா, குமுதா என்ற திருநங்கைகளிடம் நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் உள்ளனர். இந்த இரு திருநங்கை அணிகளுக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சமீப காலமாக சல்மாவிடம் உள்ள திருநங்கைகள் பத்துக்கும் மேற்பட்டோர் விமலா, குமுதா அணியில் சேர்ந்து உள்ளனர். அவ்வாறு சேர்ந்த திருநங்கைகள் சல்மாவின் அணியைச் சேர்ந்த திருநங்கைகள் பணம் வசூல் செய்யும் இடத்திற்கு செல்லும்போது அவர்களிடம் வீண் தகராறு செய்து வந்துள்ளனர். இதுகுறித்து இவர்களுக்குள் உள்ள பொதுவான கருத்துகளை அனைவரும் உள்ள வாட்ஸ்அப் குரூப்பில் பதிவிட்டு உள்ளனர். இதில் இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவு தில்ஷா என்ற திருநங்கை வாட்ஸ்அப் குரூப்பில் எதிரணியைச் சேர்ந்தவர்களை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் அதிகாலை 4 மணி அளவில் புளியந்தோப்பு பகுதியில் உள்ள தில்ஷா வீட்டிற்கு வந்த விமலா, குமுதா அணியைச் சேர்ந்த திருநங்கைகள் வீட்டை அடித்து உடைத்துள்ளனர். டிவி, பீரோ, வாஷிங் மிஷின் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கி உள்ளனர். 12 சவரன் தங்க செயினை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. தில்ஷா திருநங்கை தலைவியான சல்மாவிடம் கூறி அவர் பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் சுமித்ரா, தியா ஆகிய திருநங்கைகளை பிடித்து பேசின் பிரிட்ஜ காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த தகவல் அறிந்த எதிரணியை சேர்த்த திருநங்கைகள் காவல் நிலையம் வந்து அவர்களை விடுவிக்கும்படி கூறியுள்ளனர். அப்போது இரு தரப்பிற்கும் இடையே காவல் நிலையம் வெளியே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. இருதரப்பிலும் கற்களை மாறி மாறி அடித்துக் கொண்டனர். மேலும் காவல் நிலையம் மீதும் கற்களை எறிந்தனர். இதனால் புகார் கொடுக்க வந்த பொதுமக்கள் அலறிஅடித்து ஓடினர். அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது. இதனை யடுத்து போலீசார் அனைவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் திருநங்கைகளில் சிலர் போலீஸ் மீதும் தாக்குதல் நடத்தினர்.
இதுகுறித்து திருநங்கை சல்மா கொடுத்த புகாரின் பேரில் பேசின் பிரிட்ஜ் போலீசார் வழக்கு பதிவு செய்து புளியந்தோப்பு டாக்டர் அம்பேத்கர் குறுக்குத்தெரு பகுதியைச் சேர்ந்த திருநங்கைகள் தியா (எ), தீபன் (19), சுமித்ரா (எ) விஜயகுமார் (28), சுவாதி(23) மற்றும் வியாசர்பாடி அவ்வை நகர் பகுதியைச் சேர்ந்த தமிழ் (எ) தமிழரசி (37) என மொத்தம் 4 பேரை கைது செய்தனர். மேலும், வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில், தமிழரசி ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ள பெண் தாதா அஞ்சலையில் மகள் ஆவார். இவர் அப்பகுதியில் உள்ள திருநங்கைகளுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து அவர்களை தவறான செயல்களில் ஈடுபடுத்தியதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் ஐந்துக்கும் மேற்பட்ட திருநங்கைகளை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவத்தை அங்கிருந்த பொதுமக்கள் சிலர் தங்களது செல்போன்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்கில் பதிவிட்டு தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற ஓரிரு நாளிலேயே சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது, என பொதுமக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர். சென்னையில் காவல்நிலையம் மீது இதுவரை தாக்குதல் சம்பவம் நடைபெற்றதில்லை. முதல்முறையாக இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
