சென்னை: வடக்கு இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது. அது மேலும் வலுப்பெறும் வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இலங்கை, வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் உருவாகியுள்ள வளி மண்டல காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் அனேக இடங்களில் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நேற்று அதிராம்பட்டினத்தில் 71 மிமீ மழை பதிவாகியுள்ளது. மேலும், டெல்டாவிலும் மழை பெய்துள்ளது. வெப்பநிலையில் பெரிதாக மாற்றம் ஏதும் இல்லை என்றாலும் ஒருசில இடங்களில் இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் முதல் 6 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை குறைந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக ஈரோடு மாவட்டத்தில் நேற்று 102 டிகிரி வெயில் நிலவியது.
இந்நிலையில், வடக்கு இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி அதே இடத்தில் நிலை கொண்டுள்ள அது மேலும் வலுப்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர, வளி மண்டலத்தில் சுமார் 1.5 கிமீ உயரத்தில் இருந்து 4.5 கிமீ உயரம் வரையில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் மையப்பகுதிகளில் இருந்து தெற்கு லட்சத்தீவு பகுதிகள் வரையில், தென் தமிழகம் வழியாக ஒரு வளி மண்டல காற்றழுத்த தாழ்வுப்பாதை நிலை கொண்டுள்ளது. அத்துடன், சுமார் 0.9 கிமீ உயரத்தில் தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள லட்சத் தீவுப் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல சுழற்சியும் நிலை கொண்டுள்ளது. மேலும், லட்சத்தீவு பகுதிகளில் இருந்து மரத்வாடா வரை கடலோர கர்நாடகா வழியாக ஒரு வளி மண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதையும் நிலை கொண்டுள்ளது.
இந்த நிகவுகளின் காரணமாக தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. 13ம் தேதி முதல் மேற்கு தொடர்ச்சி மமைல மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யும். படிப்படியாக நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும். வெப்பநிலையில் பொதுவாக மாற்றம் ஏதும் இருக்காது. சென்னையில் வெயில் இயல்பை ஒட்டியே இருக்கும். நகரின் ஒருசில இடங்களி்ல் மாலை இரவில் லேசான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.
