அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் விடாது அடித்த வெயிலை விரட்டி அடித்த மழை

திருவாரூர், மே 8: அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் விடாது அடித்த வெயிலை மழை விரட்டி அடித்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோடை வெயில் கடந்த மார்ச் மாதம் முதலே துவங்கி கொளுத்தி வருகிறது. இதனால் சாலைகளில் நடமாடும் பொது மக்கள் குடை பிடித்தவாறு செல்லும் நிலை இருந்து வருகிறது. மேலும் இந்த கோடை காலத்தில் வழக்கமாக அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயிலும் கடந்த 4ம் தேதி துவங்கியுள்ளது.

திருச்சி, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம் மற்றும் வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 100 முதல் 105 டிகிரி அளவில் வெயில் சுட்டெரித்து வருகிறது. திருவாரூர் மாவட்டத்திலும் தினந்தோறும் 98 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதன் காரணமாக பொது மக்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள் குறிப்பாக கட்டிட தொழிலாளர்கள் உட்பட அனைவரும் கடும் துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

மேலும் மனிதர்களுக்கு உடலில் வெப்பம் அதிகரிப்பதால் காய்ச்சல், அம்மை, மயக்கம் மற்றும் சரும நோய்கள் உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் ஏற்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த கோடை பாதிப்பை தவிர்க்க, பொதுமக்கள் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்கவும், தேவையான அளவு தண்ணீர் குடிக்கவும் வேண்டும். தாகம் எடுக்காவிட்டாலும் கூட போதுமானஅளவு தண்ணீர் அருந்த வேண்டும்.

எலுமிச்சை ஜூஸ், இளநீர்,மோர், புளித்த சோற்று நீர் மற்றும் பழச்சாறுகளை பருகி நீரிழப்பை தவிர்க்க வேண்டும். பருவக்கால பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும். மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். மதிய நேரத்தில் வெளியில் செல்லும் போது கண்ணாடி மற்றும் காலணி அணிந்தும், குடை (கருப்பு நிறத்தை தவிர்த்து) எடுத்து செல்ல வேண்டும். மயக்கம் அல்லது உடல் நலக்குறைவை உணர்ந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். குழந்தைகளை வாகனங்களில் தனியே அமர்த்தி விட்டு வெளியே செல்லக்கூடாது. தினந்தோறும் குளிர்ந்தநீரில் குளிக்கவைக்க வேண்டும்.

வீடுகளில் சமையல் காஸ் அடுப்புகளையும், விறகு அடுப்புகளையும் பாதுகாப்பான முறையில் கையாள வேண்டும் பொதுவாக பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரையில் அவசியமின்றி பொதுமக்கள் வெளியில் நடமாடுவதை தவிர்த்துகொள்ள வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் அதிக வெப்பத்தின் தாக்கம் காரணமாக ஹீட் ஸ்டோக் எனப்படும் வெப்ப வாத நோய் ஏற்படுவதற்கு அறிகுறிகள் இருந்து வருவதால் அதற்கு ஏற்ப பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு தமிழக சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவாரூர் உட்பட மாவட்டம் முழுவதும் வழக்கம் போல் வெயில் அடித்த நிலையில், திடீரென மேக மூட்டம் திரண்டு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையாக சுமார் ஒரு மணி நேரம் வரையில் மாவட்டம் முழுவதும் பெய்தது.

இந்நிலையில் 2வது நாளாக நேற்றும் காலை வழக்கம் போல் வெயில் அடித்த நிலையில் அதன் பின்னர் திருவாரூர், திருத்துறைபூண்டி, மன்னார்குடி உட்பட பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது. மேலும் நேற்று காலையில் முத்துப்பேட்டை மற்றும் நீடாமங்கலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிளும் மிதமான மழை பெய்ததன் காரணமாக வெப்பம் குறைந்து குளிர்ச்சி ஏற்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் முன்பட்ட குறுவை நெல் சாகுபடி மற்றும் பருத்தி சாகுபடியில் ஈடுப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இந்த மழை உகந்ததாக இருப்பதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: