வேட்பாளர்கள் 30 நாட்களுக்குள் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்: அதிகாரிகள் தகவல்

வேலூர், மே 8: சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் 30 நாட்களுக்குள் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து, முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் தங்களது தேர்தல் செலவினக் கணக்குகளை தாக்கல் செய்வது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 78-ன் படி, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவுக் கணக்குகளை அந்தந்த மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் (கலெக்டர்) சமர்ப்பிக்க வேண்டும். இந்த விதிமுறை தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு மட்டுமின்றி, தோல்வியுற்றவர்கள், மிகக்குறைந்த வாக்குகள் பெற்றவர்கள் மற்றும் வைப்புத் தொகையை இழந்தவர்கள் எனப் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

வேட்பாளர்கள் தங்களது செலவு கணக்குகளை தாக்கல் செய்யும் போது வேட்புமனு தாக்கலின் போது தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அதிகார பதிவேடுகளை முழுமையாக பயன்படுத்த வேண்டும். இதில் தினசரி செலவினக் கணக்குப் பதிவேடு, ரொக்க பதிவேடு மற்றும் வங்கி பதிவேடு ஆகிய மூன்று முக்கிய பகுதிகள் முறையாக பராமரிக்கப்பட்டிருக்க வேண்டும். தேர்தல் செலவினங்களுக்காக வேட்பாளர் தனியாக தொடங்கிய வங்கிக் கணக்கின் அசல் நகல் அல்லது வங்கி அறிக்கை கண்டிப்பாக இணைக்க வேண்டும். செலவுகள் அனைத்தும் மேலும், தேர்தல் பிரசாரத்திற்காக செய்யப்பட்ட ஒவ்வொரு செலவிற்கும் உரிய அசல் ரசீதுகள் மற்றும் வவுச்சர்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

ரூ.2000க்கும் அதிகமான காசோலை அல்லது வங்கி பரிவர்த்தனை மூலமாகவே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்பதால், அதற்கான சான்றுகளும் அவசியமாகும். தாக்கல் செய்யப்படும் அனைத்தும் செலவுக் கணக்குகள் உண்மையானவை என்றும், மறைக்கப்பட்ட செலவுகள் ஏதுமில்லா வகையில், ரூ.100 மதிப்பிலான முத்திரைத்தாளில் நோட்டரி பொது அமைதி அல்லது முதன்மை நீதித்துறை நடுவர் முன்னிலையில் பெறப்பட்ட உறுதி மொழி பத்திரத்தை வேட்பாளர்கள் இணைக்க வேண்டும். வேட்பாளர் சமர்ப்பிக்கும் கணக்குகள், தேர்தல் ஆணையத்தின் செலவின பார்வையாளர்களால் பராமரிக்கப்படும் நிழல் கண்காணிப்பு பதிவேட்டுடன் ஒப்பிட்டு பார்க்கப்படும். இதில் ஏதேனும் முரண்பாடுகள் கண்டறியப்பட்டால், தேர்தல் அதிகாரிகளால் அனுப்பப்படும் நோட்டீஸிற்கு வேட்பாளர்கள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். அவ்வாறு விளக்கம் அளிக்கத் தவறினால் அல்லது கணக்குகளில் வெளிப்படைத் தன்மை இல்லையெனில் அக்கணக்குகள் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது.

குறிப்பிட்ட 30 நாள் காலக்கெடுவிற்குள் கணக்குகளைத் தாக்கல் செய்யத் தவறும் வேட்பாளர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனவே, வேட்பாளர்கள் தங்களது செலவுக் கணக்குகளைத் தயார் செய்து, மாவட்டத் தேர்தல் அலுவலகத்தில் உள்ள செலவினக் கண்காணிப்பு பிரிவில் ஒப்படைத்து, அதற்கான முறையான ஒப்புகைச் சீட்டைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: