தஞ்சாவூர், மே 8: தஞ்சையில் உள்ள 100 அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் மாணவ-மாணவியர்களை சேர்க்கை நடைபெற்று வருவதால், அருகாமமையில் உள்ளவர்கள் தங்கள் குழந்தைகளை சேர்த்திட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அழைப்பு விடுத்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 3 மேல்நிலைப் பள்ளிகளும், 7 உயர்நிலைப் பள்ளிகளும், 6 நடுநிலைப் பள்ளிகளும், 84 தொடக்கப் பள்ளிகள் என மொத்தம் 100-பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை மற்றும் 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் பயிலும் மாணாக்கர்களுக்கு உயர் கல்வி பயில 7.5 சதவீதம் முன்னுரிமையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் மாணாக்கர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் பல்வேறு சலுகைகளும், விடுதி வசதிகளும் வழங்கப்படுவதால் 2026-2027 ஆம் கல்வியாண்டில் ஐந்து வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றோர்கள் அருகாமையில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் சேர்த்திட மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
