திருவாரூர் – காரைக்குடி ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் உபயோகிப்போர் கோரிக்கை

பட்டுக்கோட்டை, மே 8: திருவாரூர் – காரைக்குடி – திருவாரூர் பயணிகள் ரயிலில் கூடுதல் ரயில் பெட்டிகளை இணைக்க வேண்டும் என பட்டுக்கோட்டை ரயில் உபயோகிப்போர் சங்கத் தலைவர் விவேகானந்தம், செயலாளர் முகேஷ், பொருளாளர் வைத்தியநாதன், துணைத்தலைவர் ராமலிங்கம், துணைச் செயலாளர் ஆத்மநாதன் ஆகியோர் தெற்கு ரயில்வே பொது மேலாளர், திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.

அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
திருவாரூர் – காரைக்குடி – திருவாரூர் பயணிகள் ரயில், திருவாரூர் – காரைக்குடிக்கு இடையே இயங்கி வருகிறது. இந்த ரயிலில் 7 பொது பெட்டிகளும், 2 மகளிர் பெட்டிகளும் உள்ளன. இந்த ரயில் திருவாரூர், திருநெல்லிக்காவல், ஆலத்தம்பாடி, திருத்துறைப்பூண்டி, தில்லைவிளாகம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி பகுதிகளில் உள்ள அரசு அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், வியாபாரிகள், நோயாளிகள், ஆன்மீக சுற்றுலா பயணிகள் ஆகியோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகின்றது.

ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த ரயில் மூலம் அறந்தாங்கி அருகில் உள்ள ஆவுடையார்கோயில், காரைக்குடி அருகில் உள்ள பிள்ளையார்பட்டி கோயில், குன்றக்குடி முருகன் கோயில்களுக்கு அதிகளவில் ஆன்மீக சுற்றுலா சென்று வருகிறார்கள். மேலும் இந்த ரயில் மூலம் காரைக்குடி வரை வந்து பின்னர் காரைக்குடியிலிருந்து மதுரைக்கு பேருந்து மூலம் நிறைய பயணிகள் தினசரி சென்று வருகிறார்கள்.

மேலும் இந்த ரயில் பெட்டி பகிர்மான முறையில் திருச்சி ராமேஸ்வரம் முன்பதிவில்லா விரைவு ரயிலாக (16849/16850) இயங்கி வருகின்றன. இந்த ரயிலிலும் அதிகளவில் பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். தற்போது இயங்கி வரும் இந்த ரயிலில் 9 பெட்டிகள் மட்டும் இருப்பதால் இட நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. எனவே ரயில்வே நிர்வாகம் 9 பெட்டிகளுக்கு பதிலாக 12 பெட்டிகளை கொண்ட (10 பொது பெட்டிகள், 2 ரயில் மேலாளருடன் இணைந்த மகளிர் பெட்டிகள்) ரயிலாக இயக்க வேண்டுகிறோம்.

இதனால் அதிகளவில் பயணிகள் வசதியாக பயணம் செய்வார்கள். ரயில்வே நிர்வாகத்திற்கும் அதிக அளவில் வருமானம் கிடைக்கும். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Related Stories: