பள்ளிகொண்டா, மே 8: பள்ளிகொண்டா அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டு உடைத்து 36 சவரன் நகை, ரூ. 2 லட்சத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றுள்ளனர். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மகன் கோபி(44). இவருக்கு சசிகலா என்ற மனைவியும் ஜனா மற்றும் பிரவீன்குமார் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கோபியின் வீடு கந்தனேரி டாஸ்மாக் கடை அருகே உள்ளது. இவர் கடந்த 10 ஆண்டுகளாக சென்னையில் உள்ள பிரபலமான ஒரு இனிப்பு கடையில் வேலை செய்து வருகிறார்.
மனைவி சசிகலா ஆம்பூர் அருகே உள்ள பச்சகுப்பத்தில் உள்ள ஒரு கார்மெண்ட்ஸ் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். மகன் ஜனா சென்னையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் விடுதியில் தங்கி பி.டெக் படித்து வருகிறார். பிரவீன்குமார் குடியாத்தம் அரசினர் கலைக் கல்லூரியில் பி.பி.ஏ பயின்று வருகிறார். கோபி தன் பிள்ளைகளையும், மனைவியை பார்ப்பதற்காக மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே வீட்டிற்கு வந்து செல்கிறார்.
இந்நிலையில் வழக்கம்போல் நேற்று முன்தினம் காலை சசிகலா வேலைக்கு சென்று விட்டார். மகன் பிரவீன் குமார் வீட்டை பூட்டிவிட்டு கல்லூரிக்கு சென்று விட்டார். இந்நிலையில் அன்று மதியம் ஒரு மணிக்கு கல்லூரியை முடித்துக் கொண்டு பிரவீன்குமார் வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டின் முன்பக்க இரும்பு கேட் திறந்து கொண்டு உள்ளே சென்றபோது முன்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அறையில் இருந்த பீரோ மற்றும் பூஜை அறை கதவுகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து போன் மூலம் தனது பெற்றோருக்கு தகவல் கொடுத்தார். வேலையில் இருந்த கோபி மற்றும் சசிகலா மாலை 3 மணிக்கு வீட்டுக்கு வந்து பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த நெக்லஸ், ஆரம், தாலி சரடுகள், வளையல், 4 ஜோடி கம்மல், உள்ளிட்ட தங்க நகைகளும், பூஜை அறையில் வைத்திருந்த தங்கை சத்யாவின் நகை 9 சவரன் உட்பட மொத்தம் 36 சவரன் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.2 லட்சம் திருட்டு போனது தெரிய வந்தது.
இதுகுறித்து கோபி பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் தர்மன் ஆகியோ சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அக்கம் பக்கத்தில் விசாரணை செய்தனர்.
தகவலறிந்த வேலூர் எஸ்பி சிவராமன் மற்றும் அணைக்கட்டு டிஎஸ்பி நந்தகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து திருட்டு நடந்த வீட்டில் சோதனை செய்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் டோரா வரவழைக்கப்பட்டு சுமார் 200 மீட்டர் தூரத்தில் ஓடி சென்று நின்று விட்டது. இதுகுறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு இடங்களில் உள்ள சிசிடி கேமராக்களை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே வெகு நேரமாக சந்தேகத்திற்கு இடமாக கந்தனேரி டாஸ்மாக் கடை அருகே நின்று நோட்டமிட்ட வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து திருட்டு சம்பவம் குறித்து சந்தேகத்தின் பேரில் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
