மார்க்சிஸ்ட் கம்யூ., பாலகிருஷ்ணன் தாக்கு பெண்களுக்காக பாடுபடுவது போல மோடி நீலிக்கண்ணீர் வடிக்கிறார்

கடலூர், ஏப். 21: கடலூர் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் சந்திரசேகரனுக்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் எம்எல்ஏவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமைக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் பேசியதாவது: இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து தொகுதி மறு வரையறை மசோதாவை தோற்கடித்துள்ளனர். மோடியின் சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன் பாஜக மோடியை மண்ணை கவ்வ வைத்துள்ளது.

12 ஆண்டுகள் ஆட்சியில் தமிழகத்துக்கு ஒன்றிய அரசு எந்த திட்டங்களையும் கொண்டு வரவில்லை. ரூ. 400 இருந்த சிலிண்டரை ரூ.1100 உயர்த்திய அரசுதான் பாஜக. தங்கம் விலையை போட்டி போடும் அளவுக்கு உரத்தையும், யூரியாவையும் உயர்த்தியது தான் பாஜவின் சாதனை. 100 நாள் வேலை திட்டத்தை படிப்படியாக சிதைத்து மோடி ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிட்டார். 12 ஆண்டுகளில் 20 லட்சம் கோடி பெரு முதலாளிகளுக்கு கடனை தள்ளுபடி செய்ததுதான் பாஜ ஆட்சி. மோடி, மக்களிடம் பேசும் போது பெண்களுக்காக வரிந்து கட்டிக்கொண்டு நீலிக்கண்ணீர் வடிக்கிறார். உண்மைக்கு புறம்பாக பேசுகிறார். 2023ம் ஆண்டில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இரண்டு ஆண்டுகளில் அதை அமலாக்கி இருக்கலாம்.

2024ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் செயல்படுத்தி இருந்தால் மூன்றில் ஒரு பகுதி பெண்கள் நாடாளுமன்றத்திற்கு சென்றிருப்பார்கள். 10 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றுள்ளது. அங்கேயும் அமலாகவில்லை. மோடிக்கு தமிழ்நாடு என்ன துரோகம் செய்தது, வரி செலுத்தவில்லையா, தொழில் வளர்ச்சியில் பங்களிப்பு கொடுக்கவில்லையா? தென் மாநிலங்களில் எம்பிக்கள் குறையும் உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் நாடாளுமன்ற எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்றார். கூட்டத்தில் ஐயப்பன் எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ புகழேந்தி, துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக மாநகர செயலாளர் ராஜா, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மாதவன், உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: