புதுச்சேரி கோட்டக்குப்பம் அருகே மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்

காலாப்பட்டு, ஏப். 19: புதுச்சேரி கோட்டக்குப்பம் அருகே மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட பெரிய கோட்டக்குப்பம் ஆதிதிராவிடர் பகுதியில் சுமார் 750க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 2500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அதன் அருகில் நடுக்குப்பம் மீனவ கிராமத்தில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள், வசித்து வருகின்றனர். பெரிய கோட்டக்குப்பம் ஆதிதிராவிடர் மக்கள் நடுக்குப்பம் கடற்கரை அருகே உள்ள சுமார் 1 ஏக்கர் இடத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை புதைத்து வருகின்றனர். கடல் அரிப்பை தடுக்கும் வகையில் நடுக்குப்பம், தந்திரயான்குப்பம் மற்றும் அதன் அருகில் உள்ள மீனவ கிராமங்களில் கருங்கற்கள் கொட்டியதால், நடுக்குப்பம், மீனவர்களுக்கு படகுகளை நிறுத்துவதற்கு போதுமான இடம் இல்லாமல் போனது.

அதனால் நடுக்குப்பம் மீனவர்கள் தங்களது மீன்பிடி படகுகளை பெரிய கோட்டக்குப்பம் மக்கள் பயன்படுத்தும், சுடுகாட்டு பகுதியில் நிறுத்தி வைத்து வருகின்றனர். அதற்கு பெரிய கோட்டக்குப்பம் ஆதிதிராவிடர் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று காலை நடுக்குப்பம் மீனவர்கள் 100க்கும் மேற்பட்டோர் தங்களின் குடும்பத்தினருடன் ஆதிதிராவிடர் மக்கள் பயன்படுத்தி வரும் சுடுகாட்டை அப்புறப்படுத்த வேன்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தேர்தல் புறக்கணிப்பு செய்யப்போவதாக கையில் பதாகைகளுடன் கருப்பு கொடியுடன் கடலில் இறங்கி திடீரென போராட்டம் நடத்தினர். இதனால் நடுக்குப்பம் பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. தகவல் கிடைத்து வந்த தேர்தல் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் போராட்டக் குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தேர்தல் துறையின் சமாதானத்தை ஏற்றுக் கொண்டு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories: