கடலூர், ஏப். 17: கடலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வழக்கறிஞர் சந்திரசேகரனை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் தங்கபாலு நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் தமிழ்நாடு கடைசி மாநிலமாக வளர்ச்சியில் பின் தங்கி இருந்ததை மறந்து விடக்கூடாது. அதன்பிறகு முதல்வரான மு.க. ஸ்டாலின் நாட்டிலேயே செயல்பாடுகளில முதன்மை முதலமைச்சராக பெயர் வாங்கினார். தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக மாற்றியுள்ளார். தொழில்துறையில், வேலைவாய்ப்பில், பெண்கள் முன்னேற்றத்தில், விவசாயத்தில், அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னேறி இருக்கிறது. கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றிய பெருமை முதலமைச்சர் மு.க ஸ்டாலினையே சாரும். இப்படி பல நல்ல பல திட்டங்களை செயல்படுத்திய முதல்வர் மு.க ஸ்டாலின் வேண்டுமா?
அல்லது தமிழ்நாடு மக்களுக்கு எதிராக இருக்கும் பாஜவை ஆதரிக்கின்ற, அதிமுக ஆட்சிக்கு வருவதை விரும்புகிறீர்களா? தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதைக்கு அழைக்கும் ஒரு மகத்தான தலைவர், மு க ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வரவேண்டுமெனில் கடலூர் வேட்பாளருக்கு கை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். ஏனெனில் தமிழகத்திலே தாய்மார்களுக்கு தெரியும் ரூ.1000 உரிமைத்தொகை தருவோம் என்று சொன்னார், தற்போது வழங்கிக் கொண்டிருக்கிறார். பொங்கலுக்கு முன்பு 3 ஆயிரம் கொடுத்துள்ளார், நீங்கள் கேட்காமலேயே பிப்ரவரி மாதத்தில் ரூ.5 ஆயிரம் வங்கிக் கணக்கில் வரவு வைத்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின் என்பதை எல்லோரும் மறந்து விடக்கூடாது. வேலைவாய்ப்பு, புதிய பல தொழிற்சாலைகள் கொண்டுவந்துள்ளார். ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி செய்ய போகிறோம், மாணவர்களுக்கு, கல்வி உதவித் தொகையை உயர்த்தி வழங்கவுள்ளோம், கல்லூரி மாணவர்களுகு மாத உதவித்தொகை ரூ. 1500 ஆக உயர்த்தி வழங்குவார், என்றார்.
