விழுப்புரம் அருகே மனைவி தற்கொலை வழக்கில் கணவர், மாமியாருக்கு 10 ஆண்டு சிறை

விழுப்புரம், ஏப். 17: விழுப்புரம் அருகே மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர், மாமியாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது.
விழுப்புரம் அருகே பொய்யப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சௌமியா(28). என்பவருக்கும் குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பவருக்கும் கடந்த 2018ம் ஆண்டு முறைப்படி திருமணம் நடந்துள்ளது. திருமணமாகி 2 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால் கணவர் செல்வகுமார் (32), மாமியார் உஷா(48) ஆகிய இருவரும் சௌமியாவை அவரது மனம் புண்படும்படி பேசி வந்ததாக கூறப்படுகிறது.
குழந்தை இல்லாததை காரணம் காட்டி அடிக்கடி துன்புறுத்தி சண்டை போட்டதால் மன உளைச்சல் அடைந்த சௌமியா கடந்த 2020 ஆகஸ்ட் 11ம் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது தனது உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அவரது தாய் புனிதவதி அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் செல்வகுமார்(32), மாமியார் உஷா(48) இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி வினோதா நேற்று தீர்ப்பு கூறினார். அதில் குற்றம் சாட்டப்பட்ட செல்வகுமார், உஷா இருவருக்கும் 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.20,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்து உத்தரவிட்டார். தொடர்ந்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட இருவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories: