ஒரு மாதமாக காய்ச்சலால் அவதிப்பட்ட புதுச்சேரி கல்லூரி மாணவி பரிதாப பலி

புதுச்சேரி, ஏப். 21: புதுச்சேரி உறுவையார், சாவித்திரி நகரை சேர்ந்தவர் சிவசுந்தரமூர்த்தி (49). இவர் கருவடிக்குப்பத்தில் உள்ள மயானத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி செல்வி (38). இவர்களுக்கு சோபிகா (22), சொப்னா (20) என்ற 2 மகள்களும், 17 வயதில் ஒரு மகனும் உள்ளனர். சோபிகா லாஸ்பேட்டையில் உள்ள அரசு பட்டமேற்படிப்பு கல்லூரியில் எம்ஏ படித்து வருகிறார். கடந்த மாதம் முதல் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த சோபிகா, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் சோபிகா உடல் நிலை மிகவும் மோசமடைய, அவரை பெற்றோர் உடனடியாக கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு சோபிகா அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அங்கு அவருக்கு டாக்டர் குழு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

அங்கு சோபிகா, சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் அதிகளவில் சத்தம் எழுப்பியபடி இருந்ததால், சக நோயாளிகளின் நலன்கருதி, மருத்துவர்கள் அவரை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே நேற்று முன்தினம் காலை மீண்டும் சோபிகாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே சோபிகா இறந்து விட்டதாக கூறிவிட்டனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக சோபிகாவின் தந்தை சிவசுந்தரமூர்த்தி மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக நீடிக்கும் வெயில் தாக்கத்தால் வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி கல்லூரி மாணவி இறந்தாரா? அல்லது வேறு காரணமா? என்பது பிரேத பரிசோதனை அறிக்கை முடிவில் தெரியவரும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: