விழுப்புரம், ஏப். 18: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி வழியாக செம்மரக்கட்டைகள் லாரியில் கடத்திச் செல்வதாக வந்த ரகசிய தகவலின் பேரில் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை சுங்க அதிகாரிகள் விரைந்து சென்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது செங்கல்பட்டில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த லாரியை சந்தேகத்தின் அடிப்படையில் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது லாரியில் மேல் பகுதியில் பேக்கரி நிறுவனங்களில் இனிப்பு தயாரிக்க பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் இருந்தன. தொடர்ந்து சத்தேகம் ஏற்பட்டதால் அதனை நீக்கிவிட்டு பார்த்தபோது சாக்கு மூட்டைகளில் செம்மரக்கட்டைகள் அடிப்பகுதியில் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். சுமார் 180 எண்ணிக்கையிலான செம்மரக்கட்டைகள் இருந்ததும், இதன் மதிப்பு ரூ.1 கோடி என்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்திய சுங்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரணையில், கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த குமார்(48) என்பதும், செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர்யில் உள்ள ஒரு குடோனில் இருந்து பெங்களூருக்கு இந்த செம்மரக்கட்டையை கடத்திச் செல்வதாக தெரிவித்துள்ளார்.
இது மட்டும்தான் என்னுடைய வேலை. யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது? யார் அனுப்பி வைத்தார்கள் எனக்கு எதுவும் தெரியாது. கூலிக்காக மட்டுமே நான் இந்த வேலை செய்கிறேன் என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சுங்க அதிகாரிகள் விழுப்புரம் மாவட்ட வன அலுவலரை தொடர்பு கொண்டு இந்த செம்மரக்கட்டை லாரி மற்றும் டிரைவர் குமாரையும் அவர்களிடம் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து குமாரை கைது செய்தனர். தொடர்ந்து முதல் கட்ட விசாரணையில், செம்மரக்கட்டைகள் நீண்ட நாட்களாக யாருக்கும் தெரியாமல் கடத்திச் செல்வதும், தற்போது சுங்க அதிகாரிகள் ரகசியதகவலின் பேரில் வந்து மடக்கிப் பிடித்ததும் தெரியவந்தது. செம்மரக்கட்டைகளை அனுப்பி வைத்தது யார் இதனை வாங்கியது யார் என்ற விவரம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை அடிப்படையில் அவர்களையும் மடக்கி பிடித்து கைது செய்ய வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
ஜப்பானுக்கு கடத்த முயற்சி?
வனத்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து கடத்திவரப்பட்ட செம்மரக்கட்டைகள் பெங்களூருக்கு கொண்டு சென்ற பின்னர் அங்கிருந்து கப்பல் மூலம் ஜப்பானுக்கு அனுப்பி வைக்க கடத்தல் கும்பல் திட்டமிட்டு இருப்பதும் தெரியவந்துள்ளதாம். இந்த சம்பவம் நீண்ட காலமாக நடந்து வந்ததும், தற்போது கடத்தல் கும்பல் குறித்து இன்பார்மர் ஒருவர் கொடுத்த தகவலால் கடத்தல் கும்பல் சிக்கி உள்ளது. வனத்துறை விசாரணைக்கு பிறகுதான் இதன் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள் என்று தெரியவரும்.
புஷ்பா பட பாணியில் கடத்தல் கும்பல்
செம்மரக்கட்டைகள் கடத்தலை வைத்தே புஷ்பா படம் உருவாக்கப்பட்டது. அதே பாணியில் இந்த செம்மர கடத்தல் சம்பவம் அரங்கேறியுள்ளது. லாரியில் செம்மரம் கடத்தல் யாரும் கண்டறியாமல் இருக்க போலீசார், வனத்துறையினர் மற்றும் அதிகாரியின் கண்ணில் மண்ணைதூவி ஒவ்வொரு கடத்தலின் போதும் எதாவது பொருட்களை மேலே போட்டு அடியில் செம்மர கட்டைகளை கடத்திச் சென்றுள்ளனர். புஷ்பா பட பானியில் இந்த கடத்தல் சம்பவம் நீண்ட நாட்களாக நடந்து வந்துள்ளது.
