வழக்கறிஞர் சந்திரசேகரன், அனைத்து மக்களிடமும் எளிதாக பழக கூடியவர் திராவிட முன்னேற்ற கழகம் களத்தில் முதலிடத்தில் உள்ளது

கடலூர், ஏப். 19: கடலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வழக்கறிஞர் சந்திரசேகரனை ஆதரித்து காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர் கடலூர் முதுநகர், சிங்காரத்தோப்பு, அக்கரைகோரி, துறைமுகம் பகுதிகளில் வீடு வீடாக சென்று நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரசாரத்தில் முதுநகர் மணிக்கூண்டு பகுதியில் காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர் பேசுகையில், வாக்காளர்களிடம் தமிழக அரசின் சாதனைகளை விளக்கினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எனது நெருங்கிய நண்பர், அவர் மீண்டும் ஆட்சி அமைத்த உடன் 100 சதவீதம் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவார்.

2021ம் ஆண்டு பதவியேற்றபோது முதல்வர் அறிவித்த அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளார். நான் 5 முதல்வர்களுடன் நெருங்கி பழகி உளளேன். தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கிற திராவிட முன்னேற்ற கழகம் களத்தில் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னை அர்ப்பணித்து கொண்டு அரசியல் பயணத்தை மேற்கொண்டுள்ளார். கலைஞரின் பெயரை சொல்லி முதல்வராக வரவில்லை, மு.க.ஸ்டாலினை மக்கள், முதல்வராக ஏற்றுக்கொண்டனர்.எடப்பாடி அப்படி இல்லை எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா, சசிகலாவை பின் தொடர்ந்து முதல்வராக வந்தவர்.

உங்களுடைய பிரச்னைகளை நேரடியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வைக்கு கொண்டு சென்று நிறைவேற்றி வைப்பேன். உங்கள் வேட்பாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன் ஒரு நல்ல மனிதர், அனைத்து மக்களிடம் எளிதாக பழகக் கூடியவர். கடலூர் சட்டமன்ற தொகுதியில் நமது வேட்பாளர் சந்திரசேகரனை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்க வைக்க வேண்டியது உங்களுடைய கடமை. மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வரவேண்டும் என்றால், கடலூர் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் சந்திரசேகரனை நீங்கள் ஜெயிக்க வைக்க வேண்டும்.ஒருமுறை அவருக்கு வாய்ப்பு கொடுங்கள். அவர் ஜெயித்தால் அவரை நீங்கள் விட மாட்டீர்கள். மீண்டும் மீண்டும் அவரை நீங்கள் ஜெயிக்க வைப்பீர்கள், என்றார். காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரங்கமணி, திமுக மாநகர செயலாளர் ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், விசிக மாவட்ட தலைவர் கலைமோகன், காங்கிரஸ் சிறுபான்மை துறை மாவட்ட தலைவர் ரஹீம், திமுக மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: