ஆரணி, ஏப். 21: ஆரணி அருகே நண்பர்களுடன் காரில் சென்ற ஐடி ஊழியரிடம் ஆவணமின்றி ரூ.2.50 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் சட்டபேரவை தேர்தல் வரும் 23ம் தேதி ஒரே கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்கும் பொருட்டு பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவினர்கள் தீவிரப்படுத்தப்பட்டு 24 மணிநேரமும் கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி ஆரணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆரணி அடுத்த ஆதனூர் கூட்ரோடு அருகேயுள்ள ஆரணி- ஆற்காடு செல்லும் சாலையில் தேர்தல் நிலைக் கண்காணிப்பு குழு அலுவலர் கவிதா, தலைமை காவலர் சரண்யா, முதல்நிலை காவலர் பரசுராமன் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஆற்காட்டில் இருந்து ஆரணி நோக்கி வந்த காரை மடக்கி சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.2.50 லட்சம் ரொக்கம் பணம் எடுத்து வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை செய்ததில், சென்னை செனாய் நகர் பகுதியை சேர்ந்த தினேஷ் (36), ஐடி ஊழியர் என்பதும், திருவண்ணாமலை கோயிலுக்கு தனது நண்பர்களுடன் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து நிலைக் கண்காணிப்பு குழு அலுவலர் கவிதா உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ2.50லட்சம் பணத்தை பறிமுதல் செய்து, ஆரணி தாலுகா அலுவலகத்தில் சமுக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் லலிதா, துணை தாசில்தார் விஜயா ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.
