திருவண்ணாமலை, ஏப். 17: இந்தியாவிலேயே மாநில உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் முதுகெலும்புள்ள ஒரே முதல்வர் மு.க.ஸ்டாலின் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்தார். திருவண்ணாமலையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வேலுவை ஆதரித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பிரசார பொதுக்கூட்டம் நேற்றிரவு திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே நடந்தது. திராவிடர் கழக மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். தொகுதி தேர்தல் பொறுப்பாளர் எ.வ.குமரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசியதாவது: தமிழ்நாட்டின் உரிமையை பறிக்கும் தொகுதி மறுவரை சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடியேற்றி போராட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்தி இருக்கிறார். மாநில உரிமைகளுக்காக இந்தியாவிலேயே குரல் கொடுக்கும் முதுகெலும்புள்ள ஒரே முதல்வர் மு.க.ஸ்டாலின். அமித்ஷா, ஆர்எஸ்எஸ் கூட்டம் தங்கள் திட்டங்களை வெளிப்படையாக சொல்லாமல் இனிப்பில் விஷம் தடவுவதை போல தொகுதி மறுவரையறை சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். பாஜகவுக்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்துள்ள எடப்பாடி பழனிச்சாமி இந்த சட்ட மசோதாவில் எந்த பாதிப்பும் இல்லை என்கிறார்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, தாயுமானவர் திட்டம், மகளிர் விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், கனடா போன்ற வெளிநாடுகளிலும் பின்பற்றக்கூடிய காலை உணவு திட்டம் போன்ற சாதனைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்திருக்கிறார். திராவிட மாடல் நாயகர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு துணையாக இருக்கக்கூடியவர் அமைச்சர் எ.வ.வேலு. தமிழ்நாட்டின் பல்வேறு சிறப்பு மிக்க கட்டிடங்கள், நூலகங்கள், சாலைகள் அமைத்து பெருமை சேர்த்திருக்கிறார். மகத்தான பல சாதனைகளை செய்திருக்கிறார். திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களால் பயன்பெறாத ஒரு குடும்பம் கூட தமிழ்நாட்டில் இல்லை என்கிற நிலை தான் ஏற்பட்டுள்ளது. இந்த சாதனைகள் தொடர வேண்டும். பேரறிஞர் அண்ணா தனது இறுதி கடிதத்தில் கூட மாநில உரிமை பறிபோகக்கூடாது என எழுதினார். அவரது பெயரில் கட்சி நடத்துகிறவர்கள் அமித்ஷாவிடம் நிபந்தனையற்ற சரணாகதி அடைந்திருக்கிறார்கள்.
தொகுதி மறுவரையரை எனும் பெயரில் சூழ்ச்சி நடக்கிறது. தமிழ்நாட்டின் நலனுக்காக உரிமைக்காக என்றைக்காவது அதிமுக குரல் கொடுத்திருக்கிறதா? மாநிலங்களே இருக்கக் கூடாது, ஒற்றை ஆட்சி முறைதான் இருக்க வேண்டும், கூட்டாட்சி இருக்கக் கூடாது என்பதுதான் பாஜக ஆர்எஸ்எஸ் திட்டம். அதற்காகத்தான் தொகுதி மறுவரையரை கொண்டு வந்துள்ளனர். ஓநாய் பசுந்தோள் போர்த்தி வருகிறது மக்கள் நம்பக் கூடாது. தமிழ்நாட்டுக்காக ஒன்றிய பாஜக அரசு செய்த ஒரு திட்டத்தையாவது அவர்களால் சொல்ல முடியுமா? இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன் மாநகர செயலாளர் கார்த்தி வேல்மாறன் மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், துணை செயலாளர் பிரியா விஜயரங்கன், அமைப்புசாரா தொமுச மாநில பிரசார செயலாளர் ஏ.ஏ.ஆறுமுகம், மாவட்ட அமைப்பாளர் டிவிஎம் நேரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
