வந்தவாசி, ஏப். 18: வந்தவாசி நகராட்சி தலைவர் வீட்டின் முன் தவெக வேட்பாளர் விசிலடித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது இருதரப்பினரிடையே வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் 2 திமுக நிர்வாகிகள் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் எம்.உதயகுமார் வந்தவாசி நகரில் நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது கலாயக்கார தெருவில் வாக்கு சேகரிக்க சென்றபோது விசில் அடித்தவாறு சென்றுள்ளார். அப்போது நகராட்சித் தலைவர் ஜலால் வீட்டின் முன்பாக விசில் அடித்து ஒருமையில் பேசினாராம். ஏன் மரியாதை குறைவாக பேசுகின்றீர்கள் என ஜலால் கேட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவர்கள் மியன்னா காதர்சா தெருவிற்கு சென்றுவிட்டு மேல்மருவத்தூர் நெடுஞ்சாலையில் சென்றனர். அப்போது அங்கு பாய் விற்பனை கடையில் நகராட்சி தலைவர் ஜலால் அமர்ந்து இருப்பதை பார்த்ததும் மீண்டும் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது நகராட்சித் தலைவர் தேர்தல் வாக்குறுதியை கூறி வாக்கு கேளுங்கள், தனிப்பட்ட நபரை விமர்சனம் செய்யக்கூடாது என கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து சற்று தூரம் பாம்பு புத்து கோவில் வரை சென்ற வேட்பாளர் வாகனம் மீண்டும் சென்ற வழியாகவே திரும்பி வந்தது. இதையடுத்து மீண்டும் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். பிரசார வாகனத்தில் இருந்த பேனர் கிழிக்கப்பட்டது. மைக்கை பிடித்து இழுத்தனர். மேலும் இதில் நடந்த தள்ளுமுள்ளுவில் திமுக நகர இளைஞரணி துணை அமைப்பாளர் அப்துல் பாசித், இளைஞரணி வட்ட செயலாளர் நசுருதீன் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து இரு தரப்பும் வந்தவாசி தெற்கு காவல் நிலையம் முன்பாக குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
