திருவண்ணாமலை, ஏப்.19: திருவண்ணாமலை மாவட்டத்தில் பணிபுரியும் வெளிமாவட்ட அலுவலர்களின் 1371 தபால் வாக்குகள் சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு அனுப்பும் பணி நேற்று நடந்தது தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் வரும் 23ம் தேதி நடக்கிறது. அதையொட்டி, விரிவான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் மற்றும் காவல்துறையினருக்கு தபால் வாக்குகள் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அதற்கான மையங்களில் தபால் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் பணிபுரியும் வெளி மாவட்டங்களை சேர்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் செலுத்திய தபால் வாக்குகளை சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு பிரித்து அனுப்பும் பணி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இப்பணியை மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான தர்ப்பகராஜ் நேரடி ஆய்வு செய்தார். முதற்கட்டமாக 1371 தபால் வாக்குகள் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக வரும் 21ம் தேதி இரண்டாவது கட்டமாக தபால் வாக்குகள் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.
வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இன்று 2ம் கட்ட பயிற்சி: திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான 2ம் கட்ட மறுப்பயிற்சி வகுப்பு இன்று நடக்கிறது. செங்கம் இராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருவண்ணாமலை காந்திநகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கீழ்பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கலசப்பாக்கம் சிஷ்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளி, செய்யாறு அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடக்கிறது. வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் 12,084 வாக்குப்பதிவு அலுவலர்கள் பயிற்சியில் கலந்து கொள்கின்றனர். காலை 9 மணி முதல் மாலை 5 வரை 2ம் கட்ட புத்தாக்கப்பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இரண்டாம்கட்ட புத்தாக்கப்பயிற்சிகளில் அனைத்து வாக்குப்பதிவு அலுவலர்களும் தவறாமல் கலந்து கொண்டு பயிற்சி மேற்கொள்ளவும், மேலும் பயிற்சி மையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு மையத்தில் தங்களது அஞ்சல் வாக்கினை செலுத்தவும் கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.
