செய்யாறு, ஏப். 18: செய்யாறில் நடந்த குடும்ப தகராறில் மனைவி அடுத்துக்கொலை செய்துவிட்டு கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் சிறுநகர் பகுதியை சேர்ந்தவர் கோடீஸ்வரன்(43) பூ வியாபாரி. இவரது மனைவி சிவசங்கரி(34) ஆற்காடு சாலையில் ரத்தப் பரிசோதனை நிலையம் வைத்துள்ளார். இவர்களுக்கு மகன் மனோ பாலாஜி(16), மகள் நிவஸ்ரீ(12) உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு வருவது உண்டாம். இந்நிலையில் வெளியூரில் படிக்கும் மகன் மனோ பாலாஜி நேற்று மாலை பள்ளி கடைசி நாள் என்பதால் அவரை அழைத்துச் செல்வதற்காக பெற்றோர்கள் வராததால் தொடர்ந்து போனில் தொடர்பு கொண்டு உள்ளார்.
போன் எடுக்காததால் தாய் சிவசங்கரியின் சகோதரருக்கு மனோபாலாஜி போன் செய்துள்ளார். அதில், ‘அப்பாவும் அம்மாவும் போன் எடுக்கவில்லை என்னவென்று பாருங்கள்’ என்று கூறியுள்ளார். உடனே சிவசங்கரியின் தந்தை வீட்டுக்கு வந்து பார்த்தபோது மகள் சிவசங்கரி கீழே ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். மருமகன் கோட்டீஸ்வரன் தூக்கில் தொங்கியபடி உயிரிழந்து கிடந்தார். நேற்று மாலை கணவன், மனைவிக்கு இடையே மீண்டும் ஏற்பட்ட தகராறில் கணவர் தாக்கியதில் மனைவி இறந்ததாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த கணவர் கோட்டீஸ்வரன் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிய வந்தது. தகவல் அறிந்த செய்யாறு டிஎஸ்பி மீனாட்சி நாதன், இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி, சப் இன்ஸ்பெக்டர் வரதராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் சிவசங்கரி, கோட்டீஸ்வரன் ஆகியோரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு என்ன என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
