திருவண்ணாமலை, ஏப். 16: திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கடந்த சில நாட்களாக வெயில் சதத்தை எட்டி வருகிறது. இதனால் பகலில் வீசும் அனல் காற்றும், இரவில் கடும் புழுக்கத்தாலும் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். மேலும் உடல் சூட்டை தணித்துக்கொள்ள மோர், தர்பூசணி, இளநீர் உள்ளிட்ட கடைகளுக்கு படையெடுத்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் வழக்கம்போல் நேற்றும் காலை முதலே சுளீரென சுட்டெரிக்க தொடங்கிய மாலை 4 மணிவரை பொதுமக்களை வாட்டி வதைத்தது. நேற்று 100.4 டிகிரி வெயில் வாட்டி வதைத்தது. இதனால் சாலைகள் வாகன ஓட்டிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை வெளியில் வரமுடியாமல் தவித்தனர்.
