பாலவாக்கம் அரசு பள்ளியில் தீத்தொண்டு வார விழா

ஊத்துக்கோட்டை, ஏப்.17: ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனை பாலவாக்கம் அரசு பள்ளியில் தீத்தொண்டு வார விழா நடைபெற்றது. ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை மற்றும் பாலவாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு தீயணைப்பு துறை சார்பில், தீத்தொண்டு வார விழா நேற்று நடந்தது. இதில், தீயணைப்பு நிலைய அலுவலர் முத்து தலைமை தாங்கினார். மருத்துவமனை டாக்டர்கள் பெரோஸ், பிதாபர்வேஸ்கான், பாலவாக்கம் பொறுப்பு தலைமையாசிரியை ரீனா ஜாக்குலின் மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், காஸ் அடுப்பு திடீரென தீப்பிடித்தால் அதை எப்படி அணைப்பது என செய்முறை செய்து காட்டினர்.
பின்னர், மருத்துவமனை ஊழியர்களிடமும், மாணவர்களிடம் தீத்தடுப்பு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கினர். அதில், தீ விபத்து ஏற்பட்டால் முதலில் உயிரைக் காப்பாற்றிக்கொண்டு பின்னர் உடைகளை காப்பாற்றுங்கள், மின் சாதனங்களில் தீ விபத்து ஏற்பட்டால் முதலில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டும். மின்சார தீ விபத்திற்கு தீயணைக்க தண்ணீரை பயன்படுத்த கூடாது உலர்ந்த மணலை பயன்படுத்த வேண்டும். ஆடைகளில் தீ பற்றிக்கொண்டால் ஓடாதீர்கள். குளிர்ந்த தண்ணீர் ஊற்றி அணைக்கவும், தண்ணீர் இல்லாவிட்டால் படுத்து உருளவேண்டும் என பல்வேறு வாசகங்களும், ஆலோசனைகளும் வழங்கினர்.

Related Stories: