அயோத்தி: ராமர் கோயிலில் நன்கொடை நிதி மற்றும் காணிக்கைள் கையாடல் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இந்த முறைகேடு குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதுடன், உச்ச நீதிமன்றம் இதில் தடயவியல் தணிக்கையாளரைச் சேர்க்க உத்தரவிட்டுள்ளது.நிதி முறைகேடு தொடர்பாகக் கோயில் ஊழியர்கள் மற்றும் வங்கி முன்னாள் ஊழியர் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராமர் கோயில் நிதி முறைகேடுகள் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ராமஜென்மபூமி அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்தநிலையில், ராமர் கோயிலின் ஒட்டுமொத்த செயல்பாடுகளைச் சீரமைப்பதற்கான முதல் படியாக, ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை செயலாளராக ஜெகதீஷ் அபாலே நியமிக்கப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிராவை சேர்ந்த அபாலே ஆர்எஸ்எஸ் பிரமுகராவார். ராமர் கோயில் கட்டுமான பணிகளுக்கான மேலாளராக இருந்தவர். இவர் தனது குடும்பத்துடன் ராமர் கோயில் வளாகத்தில் வசித்து வருகிறார். அடுத்த கூட்டம் செப்டம்பர் 2 ம் தேதி நடைபெற இருக்கும் ராமர் கோயில் அறக்கட்டளையின் நிர்வாக குழு கூட்டத்தில் ஜெகதீஷ் அபாலேயின் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது என வட்டாரங்கள் தெரிவித்தன.
