திருவனந்தபுரம்: கேரள அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் கண்டக்டர்களான ஆஷா, ஸ்ரீனா மற்றும் சஜலா ஆகிய 3 பேர் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில் கூறியிருப்பது: கேரள அரசு பஸ்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் கண்டக்டர்கள் பணிபுரிகின்றனர். மாதவிடாய் நாட்களில் பணிபுரிவது மிகவும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. பீகார், கர்நாடகா ஒடிசா ஆகிய மாநிலங்களில் பெண் கண்டக்டர்களுக்கு மாதவிடாய் நாட்களில் 1 நாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிறது.
எனவே கேரள அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் பெண் கண்டக்டர்களுக்கு மாதவிடாய் நாட்களில் 2 நாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மனுவை பரிசீலித்த உயர்நீதிமன்றம், மனுதாரர்கள் மற்றும் கேரள அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசித்து இது தொடர்பாக 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய கேரள அரசுக்கு உத்தரவிட்டது.
