புதுடெல்லி: மாநிலங்களவையில் ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: இ20 பெட்ரோல் பயன்பாட்டால் வாகனத்தின் மைலேஜ் பாதிக்கப்படுவது குறித்த கவலைகள் குறித்து வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் வாகன இன்ஜின் சோதனை அமைப்புகள் விளக்கம் அளித்துள்ளன. வாகனத்தின் மைலேஜ் என்பது எரிபொருள் வகையை தாண்டி பல்வேறு காரணிகளால் தீர்மானிக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இரு சக்கர, நான்கு சக்கர இ20 எரிபொருளின் தாக்கத்தை மதிப்பிடுவதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், கார் மற்றும் இரு சக்கர வாகனங்களின் இன்ஜின்களில் எந்த மாற்றமும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பழைய வாகனங்களில் கூட இ20 பெட்ரோலை பயன்படுத்தும்போது செயல்திறனில் குறிப்பிடத்தக்க மாற்றங்களோ அல்லது அசாதாரணமான தேய்மானமோ ஏற்படவில்லை என்பதை இந்த ஆய்வுகள் உறுதிப்படுத்தி உள்ளன.
அதே சமயம், ஏப்ரல் 1, 2005 முதல் அறிமுகப்படுத்தப்பட்டு 2016-க்கு முன் தயாரிக்கப்பட்ட பிஎஸ்-3 வாகனங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் மட்டுமே, சில ரப்பர் பாகங்கள் மற்றும் கேஸ்கெட்டுகளை மாற்ற வேண்டியிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. வாகனத்தின் வழக்கமான சர்வீசின் போதே இதை எளிதாகச் சரிசெய்துவிட முடியும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
