புதுடெல்லி: டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது அமித்ஷா என்று ராகுல்காந்தி பேசியதால் மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதனால் அவை 2 முறை ஒத்திவைக்கப்பட்டது. நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததால், புதிதாக வினாத்தாள் கசிவு தடுப்புச் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. மக்களவையில் இந்த மசோதா மீதான விவாதத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று பேசியதாவது:
நமது நாட்டின் கல்வி அமைப்பின் ஆன்மாவை ஆர்.எஸ்.எஸ் கைப்பற்றியுள்ளது. தர்மேந்திர பிரதான் ஒருபோதும் கல்வி அமைச்சகத்தை நடத்தவில்லை. அந்த அமைச்சகத்தை நடத்தும் மனிதரும் அமைப்பும் ஆர்.எஸ்.எஸ் என்று அழைக்கப்படுகின்றன. ஆர்.எஸ்.எஸ் கற்பனை செய்யும் இந்த அர்த்தமற்ற வரலாற்றை அவர்கள் (மாணவர்கள்) நம்ப வேண்டியுள்ளது. பிரதான் அதன் சின்னம். நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஆர்.எஸ்.எஸ். துணைவேந்தர் ஒருவர் இருக்கிறார்.
நீட் தேர்வுத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக மாணவர்கள் நடத்திய போராட்டங்களால் நான் நம்பிக்கை அடைந்தேன். இந்த போராட்டங்கள் இளைஞர்களின் வெளிப்பாடு. இது கோபமோ, வன்முறையோ, வெறுப்போ அல்ல. மாணவர்களின் பெற்றோர்களுக்கு பாஜவையோ அல்லது ஆர்எஸ்எஸ் அமைப்பையோ எதிர்கொள்ளும் துணிச்சல் இல்லை. இருப்பினும், துணிச்சலும் கற்பனை வளமும் வலிமையும் கொண்ட இந்த மாணவர்கள், தங்களுக்கு எதிராக வீசப்பட்ட அனைத்தையும் உறுதியுடன் எதிர்கொண்டு நின்றார்கள்.
பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகிய நீங்கள், தங்களையும் தங்கள் எதிர்காலத்தையும் அழித்துவிட முடியும் என்ற எண்ணத்திற்கு அவர்கள் சவால் விடுத்தார்கள். தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக மாணவர்கள் போராடியபோது, அவர்களுக்கு எதிராக காவல்துறை அத்துமீறல்களில் ஈடுபட அனுமதி அளித்தவர் அமித் ஷா. மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதி அளித்தவர்அமித் ஷா. உள்துறை அமைச்சகம் பதிலளிக்க மிகவும் அஞ்சிய சில சங்கடமான கேள்விகளை மாணவர்கள் எழுப்பியதே இதற்குக் காரணம்.
இந்த நாட்டின் உள்துறை அமைச்சர் என்று சொல்லப்படுபவருக்கு இங்கு வந்து அமர தைரியம் இல்லை. இன்று உள்துறை அமைச்சர் ஏன் இங்கு இல்லை? அவர் பயந்துவிட்டதால்தான் இன்று இங்கு இல்லை. அவர் நமது மாணவர்களின் ரத்தத்தில் குண்டுகளைப் போட்டார். இவ்வாறு ராகுல்காந்தி பேசியதும் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. ராகுலுக்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆளும் கட்சி எம்பிக்கள் பலரும் ராகுல் காந்திக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால், அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அப்போது பேசிய கிரண் ரிஜிஜு,’உள்துறை அமைச்சர் குறித்த கருத்துக்களுக்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். அதுவரை அவையின் செயல்பாடுகளை தொடர முடியாது’என தெரிவித்தார். அப்போது பேசிய ராகுல் காந்தி, ‘வன்முறை அல்லது பலப்பிரயோகத்தைப் பயன்படுத்த உள்துறை அமைச்சரால் மட்டுமே அனுமதி அளிக்க முடியும்.
எவர் மீதும் வன்முறை அல்லது பலப்பிரயோகத்தைப் பயன்படுத்த உள்துறை அமைச்சர் அல்லது பிரதமர் மட்டுமே அனுமதி அளிக்க முடியும்’ என்று தெரிவித்தார். ராகுலின் இந்த கருத்துக்கு ஆளும் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அப்போது பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, ‘நாடாளுமன்றத்தின் கண்ணியத்தைக் காக்காவிட்டால் ராகுல் காந்தியைப் பேச அனுமதிக்க முடியாது. நாடாளுமன்றத்தில் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் உள்ளன.
அந்த விதிமுறைகளை பின்பற்றப்படாவிட்டால் என்னால் அவையை நடத்த அனுமதிக்க முடியாது. நாம் அவையின் கண்ணியத்தை குலைக்கிறோம்’ என்று கூறினார். அதை தொடர்ந்து ராகுல்காந்தியின் மைக் அணைக்கப்பட்டது. சபாநாயகர் ஓம் பிர்லா கூறுகையில் ‘இந்த விவாதம் உள்துறை அமைச்சரைப் பற்றியது அல்ல.
ராகுல்காந்தி தனது குற்றச்சாட்டுகளை நிரூபிக்க ஆதாரம் வழங்க வேண்டும். இல்லை என்றால் ராகுல்காந்தி பேச அனுமதிக்க முடியாது’ என்று கூறினார். ராகுல்காந்தியின் கருத்துக்களால் ஏற்பட்ட அமளியின் காரணமாக அவை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது, இதனால் அவரால் தனது உரையை முடிக்க முடியவில்லை. அமித் ஷா குறித்து ராகுல் பேசிய பல கருத்துக்களை அவை க்குறிப்பில் இருந்து சபாநாயகர் ஓம்பிர்லா பின்னர் நீக்கினார்.
* ஒன்று அமித்ஷா குற்றவாளி இல்லை என்றால் திறமையற்றவர்
நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல்காந்தி கூறுகையில், ‘‘இரண்டு சாத்தியக்கூறுகள் மட்டுமே இருக்க முடியும். ஒன்று போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டார். மற்றொன்று, துப்பாக்கிச் சூடு நடக்கும் என்பது உள்துறை அமைச்சருக்குத் தெரியாது.” ‘‘முதல் விஷயத்தில் அவர் குற்றவாளி.
இரண்டாவது விஷயத்தில், அவர் திறமையற்றவர், வேறு வழியே இல்லை. இந்தியாவின் துணிச்சலான உள்துறை அமைச்சர் என்று சொல்லப்படுபவர், ஏன் அவையில் இல்லை? அவர் எதுவும் செய்யவில்லை என்றால், ஏன் வரவில்லை? நாடாளுமன்றத்தில் பேசுவது எனது உரிமை, அந்த உரிமை எனக்கு இருக்க வேண்டும்’ என்றார்.
* சபாநாயகர் முன்பு பேச்சுவார்த்தை
அமித்ஷா குறித்த ராகுல்காந்தியின் பேச்சு மக்களவையை முடக்கியது. ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ எம்பிக்கள் வலியுறுத்தினர். சபாநாயகர் வரை சென்ற இந்த விவகாரத்தில் தீர்வு காண முடியாத சூழல் உருவானது. ராகுல்காந்தி தனது உரையை முழுமையாக முடிப்பதற்கு முன்பே மதியம் 1.40 மணியளவில் அவை ஒத்திவைக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு, உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்தார்.
அப்போது வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், மக்களவை எம்.பி.யும் பாஜகவின் தேசிய ஊடகப் பிரிவுப் பொறுப்பாளருமான அனில் பலுனி மற்றும் செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா ஆகியோரும் உடனிருந்தனர். அதன் பிறகு, முறையான எதிர்ப்பைப் பதிவு செய்ய ரிஜிஜு சபாநாயகர் ஓம் பிர்லாவைச் சந்திக்கச் சென்றார். அவர் அங்கிருந்து வெளியேறியபோது, காங்கிரஸ் தலைவர்களான பிரியங்கா காந்தி , கே.சி. வேணுகோபால் மற்றும் கவுரவ் கோகோய் ஆகியோர் சபாநாயகரைச் சந்திக்க அங்கு வந்தனர்.
இதை தொடர்ந்து கிரண் ரிஜிஜுவை மீண்டும் வருமாறு ஓம் பிர்லா கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து, சபாநாயகர் முன்னிலையில் காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து, அமித்ஷாவை சந்தித்து கிரண் ரிஜிஜூ நிலவரத்தை விளக்கினார். ராகுல் காந்தி மன்னிப்பு கேட்காத பட்சத்தில், பிரதமர் அலுவலகத்தின் இணை அமைச்சரான ஜிதேந்திர சிங் பதிலளித்த பிறகு மசோதா நிறைவேற்றப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.
பிற்பகல் 3 மணிக்கு அவை நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கியபோது, விவாதத்திற்குப் பதிலளிக்க ஜிதேந்திர சிங் எழுந்தார். ஆனால், ராகுல் காந்தியைத் தனது உரையை நிறைவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரி காங்கிரஸ் எம்.பி.க்கள் அவையின் மையப்பகுதிக்கு விரைந்து வந்து முழக்கங்களை எழுப்பினர். அந்த அமளிக்கு மத்தியிலும், காந்தியின் அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் ஜிதேந்திர சிங் ஒவ்வொன்றாகப் பதிலளித்தார். பின்னர் தேர்வு முறைகேடு தொடர்பான மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிற்பகல் 3.25 மணிக்கு மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
* எனது மைக்கை அணைக்கலாம் மாணவர்களின் குரலை அல்ல
நாடாளுமன்ற பேச்சுக்கு பிறகு எக்ஸ் தளத்தில் ராகுல்காந்தி வெளியிட்ட பதிவில், ‘ நாடாளுமன்றத்தில் எனது மைக்ரோபோனை பாஜவால் அணைக்க முடியுமே தவிர,’மாணவர்களின் குரலை’ அணைக்க முடியாது. இன்று நாடாளுமன்றத்தில் நான் ஆற்றிய உரையின்போது, டெல்லியில் மாணவர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறை குறித்த பிரச்சினையை எழுப்பினேன. அதற்குப் பொறுப்பானவர் உள்துறை அமைச்சர் அமித் ஷா என்பதையும் சுட்டிக்காட்டினேன். ஆனால் பாஜ என்னை பேச அனுமதிக்கவில்லை’ என்று குறிப்பிட்டார்.
* டெல்லி போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படவில்லை
நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிக்கு எதிராக டெல்லி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படவில்லை என்று ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் கூறினார். அவர் கூறுகையில்,’ துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிடும் அதிகாரம் நீதித்துறை நடுவரிடம் உள்ளது. ஒன்றிய அமைச்சரிடம் இல்லை. ராகுல்காந்திக்கு பொது வாழ்வில் அனுபவம் இல்லாததால் அவர் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
டெல்லியில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உள்துறை அமைச்சர் உத்தரவிட்டதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். ஆனால் அந்தக் குற்றச்சாட்டை அவரால் உறுதிப்படுத்த முடியவில்லை. முதலாவதாக, அடிப்படையான விஷயம் என்னவென்றால், துப்பாக்கிச் சூடு எதுவும் நடத்தப்படாதபோது, உத்தரவு பிறப்பிக்கும் கேள்விக்கே இடமில்லை என்பதை அவர் அறிந்திருக்க வேண்டும். குண்டு எதுவும் சுடப்படவில்லை, கண்ணீர்ப் புகை மட்டுமே பயன்படுத்தப்பட்டது’ என்றார்.
* ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்
டெல்லி போராட்டக்காரர்கள் மீதான காவல் துறை நடவடிக்கை குறித்து மக்களவையில் அடிப்படையற்ற மற்றும் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்த ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஒன்றிய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். நாடாளுமன்ற வளாகத்தில் அவர் கூறுகையில்,’ மக்களவையில் ராகுல் பேச்சு முழுக்க முழுக்கப் பொய்களின் தொகுப்பு. அவர் இதிலிருந்து தப்பிக்க அனுமதிக்கப்படக் கூடாது. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். இது அவையைத் தவறாகப் பயன்படுத்தும் ஒரு தீவிரமான செயலாகும்’ என்றார்.
