வகுப்பறையில் ஆசிரியை ஏளனமாக பேசியதால் மாணவன் தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது

திருமலை: தெலங்கானா மாநிலம் கட்வால் மாவட்டம் கோத்தபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் தருண் (17). கட்வால் அரசு ஜுனியர் கல்லூரியில் படித்து வருகிறார். இவர், முதலாம் ஆண்டு தேர்வு முடிவில் 440க்கு 434 மதிப்பெண்களுடன் மாவட்டத்தில் 2ம் இடத்தை பிடித்திருந்தார். இந்நிலையில் கல்லூரியில் 435 மதிப்பெண்கள் பெற்ற மாணவருடன் ஒப்பிட்டு ஆசிரியை ஒருவர் நேற்றுமுன்தினம் தருணை அவமதித்துள்ளார். இதற்கு மாணவன் தருண், தன்னை அவ்வாறு அவமதிக்க வேண்டாம் என்று ஆசிரியையிடம் முறையிட்டார். அதற்கு ”நீ என்ன அமைச்சரின் மகனா, அல்லது அதைவிட மேலானவனா?” என்று கேட்டு அந்த ஆசிரியை மீண்டும் அவமதித்துள்ளார். அப்போது வகுப்பறையில் இருந்த மாணவர்கள், கேலி செய்து சிரித்துள்ளனர். இதனால் தருண் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். இதனால் கல்லூரியில் இருந்து வீட்டிற்கு வந்த தருண் நேற்று, தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். சிறிது நேரத்தில் வீடு திரும்பிய பெற்றோர், மகன் சடலமாக கிடப்பதை பார்த்து கதறி அழுதனர்.

தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அந்த அறையில் தருண் எழுதி வைத்ததாக கூறப்படும் கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அதில் ‘ஆசிரியர்கள், மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும். அவமானப்படுத்தக்கூடாது. அவ்வாறு செய்தால் அது எவ்வளவு வலிக்கிறது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயம் அனைவருக்கும் தெரிய வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளதாம்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: