மதுராந்தகம், ஜூன் 25: மதுராந்தகம் ஏரி காத்த கோதண்டராமர் கோயிலில் பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுராந்தகத்தில் பிரசித்தி பெற்ற ஏரிகாத்த கோதண்டராமர் கோயில் உள்ளது. தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இக்கோயில் செயல்பட்டு வருகிறது. உத்தம சோழன் என்ற மதுராந்தகச் சோழ மன்னரால் வேத விற்பன்னர்களுக்கு மானியம் வழங்கப்பட்ட இடமாகவும், சுகர், விபா கண்டர் போன்ற முனிவர்கள் தவம் புரிந்த புனித இடமாகவும் இக்கோயில் விளங்கியது. மதுராந்தகம் பெரிய ஏரி உடையும் தருவாயில் இருந்தபோது ராமர் இந்த ஏரியை உடையாமல் காத்ததால் ‘ஏரி காத்த ராமர்’ என்ற பெயர் பெற்றதாக தல வரலாறு கூறுகிறது.
இக்கோயிலில் பிரமோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவையொட்டி கோயில் முழுவதும் வண்ண விளக்குகளாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதில் கருணாகர பெருமாள் தேவி, பூதேவி ஆகிய சுவாமிகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு நான்கு கால் மண்டபத்தில் எழுந்தருளி சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து பட்டச்சாரியார்கள் ராஜகோபுரம் எதிரில் உள்ள கொடிமரத்தில் கொடியை ஏற்றி வைத்து பிரமோற்சவ விழாவை தொடங்கி வைத்தனர். பின்னர் கருணாகர பெருமாள், தேவி-பூதேவி ஆகிய சுவாமிகளின் வீதி உலா நடந்தது. நாளை கருட சேவை நிகழ்ச்சியும், 28ம் தேதி நாச்சியார் திருக்கல்யாணமும், 29ம் தேதி புஷ்ப வாகன புறப்பாடும், 1ம் தேதி தேர்த்திருவிழாவும் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சிகளில் ராமர், லட்சுமணர், சீதா தேவி, கருணாகர பெருமாள் ஆகிய உற்சவர் சாமிகளுக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா நடைபெற உள்ளது. நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரதுரை, உதவியாளர் ராஜலட்சுமி, அறங்காவலர் குழு தலைவர் குமார், செயல் அலுவலர் வெங்கடேசன், ஆய்வாளர் வேல்நாயக்கன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
