மாமல்லபுரம், ஜூன் 16: சென்னை அணுமின் நிலைய நிர்வாகம், அணுமின் நிலையம் அருகில் உள்ள கிராமப்புற மக்களின் நல மேம்பாட்டில் அக்கறை கொண்டு கல்வி, சுகாதாரமான குடிநீர் வழங்குதல், அறிவியல் ஆய்வகக் கூடம் அமைத்தல், மருத்துவ முகாம் நடத்துதல், மீனவ பகுதிகளில் சமுதாய கூடங்கள், குழந்தைகள் மைய கட்டிடங்கள், கூடுதல் பள்ளி கட்டிடங்கள், மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் மற்றும் அவற்றிற்கு நீர் ஆதாரங்களை அமைத்தல், மீன்வளத்தை அதிகரிப்பதற்காக செயற்கை பவழப் பாறைகளை அமைத்தல், விவசாய உற்பத்தியை அதிகரிப்பதற்கு திறன் வளர்ப்பின் மூலமாக விவசாய தொழில் நுட்பத்தை உட்புகுத்தி விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த வாழ்வாதாரத்தை வலுப்படுத்துதல் போன்ற பல்வேறு நலப்பணிகளை செய்கிறது.
இந்த நிலையில், மாமல்லபுரம் அடுத்த பையனூரில் பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் 6 வகுப்பறைகள் கொண்ட பள்ளி கட்டிடம் கட்டித்தர வேண்டும் என பையனூர் ஊராட்சி தலைவர் சுமிதா முத்துக்குமார் சென்னை அணுமின் நிலையத்திற்கு கோரிக்கை வைத்தார். கோரிக்கையை ஏற்ற சென்னை அணுமின் நிலையம், பெருநிறுவன சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் பையனூரில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே சுமார் ரூ.2.15 கோடி மதிப்பீட்டில் 6 வகுப்பறைகள் கொண்ட பள்ளி கட்டிடம் மற்றும் நவீன கழிப்பறைகளை கட்டித் தந்தது. இதை தொடர்ந்து, பள்ளி கட்டிடம் மற்றும் நவீன கழிப்பறைகள் திறப்பு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு பையனூர் ஊராட்சி தலைவர் சுமிதா முத்துக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் கமலக்கண்ணன், ஊராட்சி துணைத்தலைவர் குமார், ஒன்றிய கவுன்சிலர் வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், சென்னை அணுமின் நிலைய இயக்குனர் சேஷய்யா கலந்துகொண்டு, ரிப்பன் வெட்டி பள்ளி கட்டிடம் மற்றும் நவீன கழிப்பறைகளை மாணவர்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பெருநிறுவன சமூக பொறுப்பு குழு தலைவர் ஹரிகிருஷ்ணன், உறுப்பினர் செயலர் ஜெகன், தமிழ்நாடு அணுமின் ஊழியர் சங்க பொது செயலாளர் கருணாமூர்த்தி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
