சுற்றுலா பயணி தவறவிட்ட பணத்தை போலீசில் ஒப்படைத்த வியாபாரி

 

மாமல்லபுரம், ஜூன் 15: மாமல்லபுரம் நகராட்சிக்கு உட்பட்ட வெண்புருஷம் பகுதியை சேர்ந்தவர் வேதகிரி (57), நடைபாதை வியாபாரி. இவர், மாமல்லபுரம் ஐந்துரதம் பகுதியில் கைவினை பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை ஐந்துரதம் பகுதியில் வியாபாரம் செய்யும் போது, அங்கு சாலையோரம் கேட்பாரற்று கிடந்த கைப்பை ஒன்றை எடுத்து பார்த்தபோது, அதனுள் ரூ.6,610 ரொக்க பணம் மற்றும் ஓட்டலில் சாப்பிட்ட பில் ஆகியவை இருப்பது தெரிய வந்தது.

அந்த, கை பையில் ஊர், பெயர் மற்றும் விலாசம் ஏதும் இல்லை. பின்னர், நடைபாதை வியாபாரி வேதகிரி தனது வியாபாரம் முடிந்து, சுற்றுலா பயணி தவற விட்ட பணத்தை சம்பந்தப்பட்டவரிடம் ஒப்படைக்க கோரி நேற்று முன்தினம் இரவு மாமல்லபுரம் டிஎஸ்பி அலுவலகத்திற்கு சென்று டிஎஸ்பி அறிவழகனிடம் பணத்தை ஒப்படைத்தார். அவரின், நேர்மையை பாராட்டி, சால்வை அணிவித்து டிஎஸ்பி அறிவழகன் கவுரவித்து, பணத்தை உரியவரிடம் ஒப்படைக்குமாறு மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கத்திடம் ஒப்படைத்தார்.

பின்னர், சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பணத்தை தவறவிட்டவரை அடையாளம் கண்டுபிடித்து வரவழைக்கிறோம், அப்போது, நீங்களே நேரில் வந்து அவரிடம் ஒப்படைக்கலாம் என கூறி வேதகிரியை பாராட்டி அனுப்பி வைத்தனர். சாலையோரம், கிடந்த பணத்தை மீட்டு போலிசில் ஒப்படைத்த நடைபாதை வியாபாரி வேதகிரியை, சக வியாபாரிகள் தேடி வந்து வெகுவாக பாராட்டினர்.

 

Related Stories: