செங்கல்பட்டு, ஜூன் 18: பட்ட பகலில் தனியார் பள்ளி ஓட்டுனர் வீட்டு கதவை உடைத்து மர்ம நபர்கள் 36 சவரன் நகைகளை திருடிச்சென்ற சம்பவம் செங்கல்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு அருகே வல்லம் ஊராட்சிக்கு உட்பட்ட தனலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன் (62). இவர் மகேந்திராசிட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவரது மகள் கூடுவாஞ்சேரி அருகே காயாரம்பேடு பகுதியில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். ரேகா கர்பிணியாக இருப்பதால், அவரது 18 பவுன் தங்க நகைகளை அவர் பெற்றோர் வீட்டில் பாதுகாப்பாக கொடுத்து வைத்திருந்தார். மேலும் அங்கேயே தங்கி சிகிச்சைக்காக அவர் மருத்துவமனைக்கு சென்று வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலை மணிவண்ணன் தனது மனைவி ராஜேஸ்வரி (50) மற்றும் மகள் ரேகா (26) ஆகியோருடன் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்று வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த மணிவண்ணன் மனைவியின் நகை 18 பவுன் மற்றும் அவரது மகள் ரேகாவின் நகை 18 பவுன் என மொத்தம் 36 பவுன் தங்க நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்கள், 5 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்து மணிவண்ணன் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கை ரேகை நிபுணர்கள் உதவியுடன் மர்ம நபர்களின் தடயங்களை சேகரித்து வருகின்றனர். பட்ட பகலில் 36 பவுன் தங்க நகைகள் திருடு போன சம்பவம் செங்கல்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையயத்துக்கு உட்பட்ட பகுதியில் திருட்டு சம்பவம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. எனவே போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
