சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி சென்றபோது அமைச்சர் மகேஷ் பொய்யாமொழிக்கு திடீர் உடல் நலக்குறைவு: பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை

காரிமங்கலம்: சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி சென்றபோது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு, திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நேற்று காலை சேலத்தில் நடந்த தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர், கிருஷ்ணகிரியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, கார் மூலம் கிருஷ்ணகிரி சென்றார். தர்மபுரி மாவட்டம், குண்டல்பட்டி பகுதியில், அமைச்சரை வரவேற்ற தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, அமைச்சருடன் காரில் சென்றார்.

மாட்லாம்பட்டி அருகே சென்றபோது, அமைச்சருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. லேசாக நெஞ்சு வலிப்பதாக கூறியதால் காரிமங்கலத்தில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மருத்துவ குழுவினர் அமைச்சருக்கு ரத்த அழுத்தம், சுகர், இசிஜி ஆகிய பரிசோதனைகளை மேற்கொண்டனர். பின்னர் அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். தகவலறிந்த அமைச்சர்கள் சக்கரபாணி, சிவசங்கரன், எம்எல்ஏக்கள் மதியழகன், பிரகாஷ், தர்மபுரி கலெக்டர் சாந்தி, முன்னாள் அமைச்சர் பழனியப்பன் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று, அமைச்சரின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர்.

மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் உடல் நலம் குறித்து, அமைச்சர்களிடம் செல்போன் மூலம் கேட்டறிந்தார். பின்னர், காரிமங்கலத்தில் இருந்து கார் மூலம் கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக பெங்களூரு சென்ற அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பெங்களூருவில் உள்ள நாராயணா இருதயாலயா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். தொடர்ந்து அவரை அங்கேயே சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

The post சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி சென்றபோது அமைச்சர் மகேஷ் பொய்யாமொழிக்கு திடீர் உடல் நலக்குறைவு: பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை appeared first on Dinakaran.

Related Stories: