கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் 4 முக்கிய பணிகள்: தமிழ்நாடு அரசின் அரசிதழில் வெளியீடு

சென்னை: கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் 4 முக்கிய பணிகள் தொடர்பாக தமிழ்நாடு அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் கடந்த மாதம் விஷச்சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்தனர். இன்னும் சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகளும் கண்டன ஆர்ப்பாட்டம், தமிழக கவர்னரை சந்தித்து விஷச்சாராயம் விவகாரத்தில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில், விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக உத்தரவிட்டார். மேலும் இந்த ஆணையம் 3 மாதத்தில் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் 4 முக்கிய பணிகள் தொடர்பாக தமிழ்நாடு அரசின் அரசிதழில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அது வருமாறு:

* கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும்.

* எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் மீண்டும் நடைபெறாமல் இருக்க, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

* சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு மெத்தனால் பயன்படுத்தப்படுவதை தடுக்க மெத்தனால் சேமிப்பு மற்றும் விற்பனை தொடர்பாக தற்போது உள்ள விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகளை ஆராய்ந்து, அதில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்தும் பரிந்துரைகளை அளிக்க வேண்டும்.

* இதுபோன்ற சம்பவங்களால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகள் குறித்தும் பரிந்துரைகளை அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசு அறிவித்துள்ள இந்த 4 முக்கிய பணிகள் தொடர்பாகவும், கூடுதலாக செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தமிழக அரசுக்கு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கோகுல்தாஸ் அறிக்கை அளிப்பார் என்று கூறப்படுகிறது.

The post கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் 4 முக்கிய பணிகள்: தமிழ்நாடு அரசின் அரசிதழில் வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: