பள்ளிப்பட்டு அருகே நள்ளிரவில் போதை ஆசாமி சிறுவனுடன் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல்

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே நேற்று நள்ளிரவு 100 அடி உயர செல்போன் டவரில் 9 வயது சிறுவனுடன் ஏறிய போதை ஆசாமி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இருவரையும் சுமார் 6 மணி நேர போராட்டத்துக்கு பின் போலீசார் பத்திரமாக மீட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. பள்ளிப்பட்டு அருகே பொதட்டூர்பேட்டை, மங்கலங்கியார் தெருவை சேர்ந்தவர் முருகன் (38). நெசவுத் தொழிலாளி. இவருக்கு மனைவி உமாமகேஸ்வரி, 3 பெண் உள்பட 5 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் தனது சிறுவயது மகளுக்கு கணவர் முருகன் பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசில் மனைவி உமாமகேஸ்வரி புகார் அளித்திருந்தார்.

இப்புகாரின்பேரில் போக்சோ சட்டத்தின்கீழ் முருகனை திருத்தணி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு நீதிமன்ற நிலுவையில் உள்ளது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே குடும்பத் தகராறு நிலவியதால், தற்போது இருவரும் தனித்தனியே பிரிந்து வாழ்கின்றனர். முருகன் மீதான போக்சோ வழக்கில் விசாரணை முடிந்து, விரைவில் தீர்ப்பு வரவிருக்கிறது. இதனால் மதுபோதையில் இருந்த முருகன், நேற்று நள்ளிரவு தனது 9 வயது மகன் சர்வேசை உடன் அழைத்து கொண்டு, நடுத்தெருவில் உள்ள 100 அடி உயர செல்போன் டவரில் ஏறி நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

மேலும், தன்மீதான போக்சோ வழக்கை திரும்ப பெறவேண்டும். தன்னுடன் மனைவி சேர்ந்து வாழவேண்டும் என்று முருகன் தற்கொலை மிரட்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்ததும் திருத்தணி டிஎஸ்பி விக்னேஷ், ஆர்.கே.பேட்டை இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் மற்றும் பள்ளிப்பட்டு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அங்கு செல்போன் டவரில் சிறுவனுடன் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த முருகனை சுமார் 6 மணி நேரம் போராடி, முதல் கட்டமாக 9 வயது சிறுவனையும், பின்னர் இன்று அதிகாலை போதையில் இருந்த முருகனையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இதனால் பொதட்டூர்பேட்டை பகுதியில் பரபரப்பு நிலவியது.

The post பள்ளிப்பட்டு அருகே நள்ளிரவில் போதை ஆசாமி சிறுவனுடன் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் appeared first on Dinakaran.

Related Stories: