பவுலர்களால் வெற்றி…ரோகித் ஷர்மா பாராட்டு

நியூயார்க்: பாகிஸ்தான் அணியுடனான டி20 உலக கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு பந்துவீச்சாளர்களின் பங்களிப்பே காரணம் என கேப்டன் ரோகித் ஷர்மா பாராட்டியுள்ளார். நியூயார்க்கில் நேற்று முந்தினம் இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச… இந்தியா 19 ஓவரில் 119 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 113 ரன் மட்டுமே எடுத்து 6 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இந்திய பந்துவீச்சில், பும்ரா 4 ஓவரில் 14 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றியதுடன் ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். ஹர்திக் 2, அர்ஷ்தீப், அக்சர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்த த்ரில் வெற்றி குறித்து கேப்டன் ரோகித் ஷர்மா கூறியதாவது: பேட்டிங்கில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. பெரிதாக பார்ட்னர்ஷிப் அமையாதது ரன் குவிப்புக்கு தடைபோட்டது. 15-20 ரன் குறைவாகவே எடுத்தோம். ஒவ்வொரு ரன்னுமே மிக முக்கியமானது.

ஆனாலும், பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றிக்கு உதவினர். அயர்லாந்துக்கு எதிராக விளையாடிய ஆடுகளத்துடன் ஒப்பிடும்போது இது ஓரளவு நல்ல பிட்ச் என்றே சொல்லலாம். மிக நெருக்கடியான சூழலிலும் வீரர்கள் மன உறுதியைத் தளரவிடாமல் போராடுவது நம்பிக்கை அளிக்கிறது. ஒவ்வொரு ஆட்டத்திலும் பும்ராவின் திறமை அபாரமாக மேம்பட்டு வருகிறது.

அவரைப்பற்றி அதிகம் பேசப்போவதில்லை. அவர் இதே மனநிலையுடன் உலக கோப்பை முழுவதும் விளையாட வேண்டும் என விரும்புகிறோம். பந்துவீச்சில் அவர் ஒரு ஜீனியஸ். முழு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி. இது தொடக்கம் தான். இன்னும் நீண்ட தூரம் போக வேண்டியிருக்கிறது. இவ்வாறு ரோகித் கூறியுள்ளார். ஏ பிரிவில் முதலிடத்தில் உள்ள இந்திய அணி தனது 3வது லீக் ஆட்டத்தில் நாளை அமெரிக்க அணியுடன் மோதுகிறது.

The post பவுலர்களால் வெற்றி…ரோகித் ஷர்மா பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: