காலையில் தென் ஆப்ரிக்கா – ஆப்கான் மோதல்: இந்தியா – இங்கிலாந்து இரவில் பலப்பரீட்சை


டரூபா: ஐசிசி உலக கோப்பை டி20 தொடரின் அரையிறுதி ஆட்டங்களில் இன்று தென் ஆப்ரிக்கா – ஆப்கானிஸ்தான், இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தும் 9வது ஐசிசி டி20 உலக கோப்பை தொடர் பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று, சூப்பர்-8 சுற்றின் முடிவில் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, ஆப்கான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. முதல் அரையிறுதி: டிரினிடாட், டரூபா நகரில் இன்று காலை நடைபெறும் முதல் அரையிறுதியில் தென் ஆப்ரிக்கா – ஆப்கான் அணிகள் மோதுகின்றன. அனைத்து உலக கோப்பையிலும் விளையாடி உள்ள தென் ஆப்ரிக்கா 3வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது (2009, 2014, 2024). இந்த முறையாவது பைனலுக்கு முன்னேற வேண்டும் என்ற முனைப்புடன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்ரிக்கா வரிந்துகட்டுகிறது. லீக் சுற்றில் 4, சூப்பர்-8 சுற்றில் 3 என தொடர்ச்சியாக 7 வெற்றிகளை வசப்படுத்தியுள்ளதால் அந்த அணி மிகுந்த தன்னம்பிக்கையுடன் களமிறங்குகிறது.

டி காக், கிளாஸன், மில்லர், ஹெண்ட்ரிக்ஸ் அதிரடியும்… யான்சன், ரபாடா, ஷம்சி, அன்ரிச் பந்துவீச்சும் தென் ஆப்ரிக்க அணிக்கு வலு சேர்க்கிறது . அதே சமயம் ரஷித் கான் தலைமையிலான ஆப்கான் அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. இதற்கு முன் ஆடிய 6 உலக கோப்பைகளிலும் 2வது சுற்றை அந்த அணி தாண்டியதில்லை. முதல் முறையாக அரையிறுதி வரை முன்னேறியுள்ளதே அந்த அணிக்கு மிகப் பெரிய சாதனை தான். லீக் சுற்றில் நியூசிலாந்து, சூப்பர்-8ல் ஆஸ்திரேலியா, வங்கதேசம் என பலம் வாய்ந்த அணிகளை சாய்த்து இருக்கிறது. குர்பாஸ், ஒமர்சாய், ரஷித், இப்ராகிம் ஸத்ரன், நூர் அகமது, நவீன் உல் ஹக், ஃபரூக்கி, முகமது நபி என அனைவரது ஒருங்கிணைந்த பங்களிப்பே இந்த வெற்றிகளுக்கு காரணம். இரு அணிகளும் முதல் முறையாக பைனலுக்கு முன்னேறும் உறுதியுடன் உள்ளதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

2வது அரையிறுதி: கயானாவில் இன்று இரவு நடைபெறும் 2வது அரையிறுதியில் முன்னாள் சாம்பியன் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மோதுகின்றன. டி20 உலக கோப்பையின் முதல் சாம்பியனான இந்தியா 5வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. ஏற்கனவே விளையாடிய 4 அரையிறுதிகளில் 2 முறை பைனலுக்கு முன்னேறி இருக்கிறது. இந்த முறை லீக், சூப்பர்-8 சுற்றுகளில் தோல்வியை சந்திக்காத 2வது அணியாக ரோகித் தலைமையிலான இந்திய அணி திகழ்கிறது. ஹர்திக், அக்சர், சூரியகுமார், துபே, பன்ட், பும்ரா, அர்ஷ்தீப், குல்தீப் ஆகியோருடன் கேப்டன் ரோகித்தும் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகின்றனர். இன்னும் 2 வெற்றியுடன் 2வது முறையாக டி20 கோப்பையை முத்தமிடும் முனைப்புடன் இந்திய வீரர்கள் களமிறங்குகின்றனர்.

நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும் 5வது முறையாக அரையிறுதியில் விளையாட உள்ளது. இதில் ஒருமுறை மட்டும் அரையிறுதியுடன் வெளியேறி உள்ளது. நடப்பு தொடரின் லீக் சுற்றில் தடுமாறிய இங்கிலாந்து, சூப்பர்-8 சுற்றில் ஓரளவுக்கு இழந்த ஃபார்மை மீட்டு அரையிறுதிக்குள் நுழைந்தது. சால்ட், பட்லர், பேர்ஸ்டோ, லிவிங்ஸ்டன், மொயீன், புரூக் அதிரடியும்… ஆர்ச்சர், டாப்லி, அடில் ரஷித், புரூக் பந்துவீச்சும் இந்திய வீரர்களுக்கு சவாலாக இருக்கும்.
இதுவரை நடந்த 8 உலக கோப்பையிலும் நடப்பு சாம்பியன் பைனலுக்கு முன்னேறியதில்லை என்ற வரலாறு இங்கிலாந்துக்கு பாதகமான அம்சம். பைனலுக்குள் நுழைய முன்னாள் சாம்பியனும், நடப்பு சாம்பியனும் முட்டி மோதுவதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

உலக கோப்பையில் மட்டும்!
* தென் ஆப்ரிக்கா – ஆப்கான் அணிகள் இதுவரை உலக கோப்பைகளில் மட்டுமே மோதி இருக்கின்றன. அந்த 2 டி20 ஆட்டங்களிலும் தென் ஆப்ரிக்காவே வென்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
* அதிகபட்சமாக தென் ஆப்ரிக்கா 209, ஆப்கான் 172 ரன், குறைந்தபட்சமாக தென் ஆப்ரிக்கா 139, ஆப்கான் 80 ரன் எடுத்துள்ளன.
* கடைசியாக விளையாடிய 5 டி20ல் ஆப்கான் 3 வெற்றி, 2 தோல்வியை சந்தித்துள்ளது. தென் ஆப்ரிக்கா 5 ஆட்டங்களிலும் வென்றுள்ளது.

ஈடுகொடுக்கும் சம பலம்!
* இந்தியா – இங்கிலாந்து அணிகள் இதுவரை 23 டி20 ஆட்டங்களில் மோதியுள்ளதில்… இந்தியா 12, இங்கிலாந்து 11ல் வென்றுள்ளன.
* உலக கோப்பைகளில் மோதிய 4 ஆட்டங்களில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளை பெற்று சமபலத்தில் உள்ளன.
* 2022 உலக கோப்பை அரையிறுதியில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழத்தியது.

* அதிகபட்சமாக இந்தியா 224, இங்கிலாந்து 215 ரன் விளாசி உள்ளன. குறைந்தபட்சமாக இந்தியா 120, இங்கிலாந்து 80 ரன் எடுத்துள்ளன.
* கடைசியாக நேருக்கு நேர் மோதிய 5 ஆட்டங்களில் இந்தியா 3-2 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.
* கடைசியாக விளையாடிய 5 டி20ல் இந்தியா ஒரு ஆட்டத்தில் கூட தோற்கவில்லை. இங்கிலாந்து ஒரு ஆட்டத்தில் தோல்வியை சந்தித்துள்ளது.

அனுமதி இலவசம்!
சென்னையில் இந்தியா – தென் ஆப்ரிக்கா மகளிர் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டியைக் காண ரசிகர்கள் கட்டணமின்றி அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) அறிவித்துள்ளது. எனினும், இதே அணிகள் மோதும் டி20 ஆட்டங்களைக் (ஜூலை 5, 7, 9) காண ரூ150 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டிக்கெட்கள் ஜூன் 29ம் தேதி முதல் www.insider.in என்ற இணையதளத்தில் விற்பனை செய்யப்படும்.

The post காலையில் தென் ஆப்ரிக்கா – ஆப்கான் மோதல்: இந்தியா – இங்கிலாந்து இரவில் பலப்பரீட்சை appeared first on Dinakaran.

Related Stories: