இறுதி போட்டியிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்: கேப்டன் ரோகித்சர்மா நம்பிக்கை

கயானா: 9வது ஐசிசி டி.20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் கயானாவில் நேற்றிரவு நடந்த 2வது அரையிறுதி போட்டியில் நம்பர் ஒன் அணியான இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து மழை குறுக்கீடுக்கு இடையே பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியில் விராட் கோஹ்லி 9 ரன்னில் ரீஸ் டோப்லி பந்தில் போல்டானார். அடுத்து வந்த ரிஷப் பன்ட் 4 ரன்னில் கேட்ச் ஆக ரோகித்சர்மாவுடன் சூர்யகுமார் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக 39 பந்தில், 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 57 ரன் எடுத்த ரோகித்சர்மா அடில் ரஷித் பந்தில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். சூர்யா 36 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 47 ரன் எடுத்து சோப்ரா ஆர்ச்சர் பந்தில் சிக்சருக்கு அடிக்க ஆசைப்பட்டு கேட்ச் ஆனார். ஹர்திக் பாண்டியா 23(13), நாட்அவுட்டாக ஜடேஜா 17 (9பந்து), அக்சர் பட்டேல் 10 ரன் எடுத்தனர். 20 ஓவரில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன் எடுத்தது. இங்கிலாந்து பவுலிங்கில் ஜோர்டன் 3 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் களம் இறங்கிய இங்கிலாந்து அணியில் கேப்டன் பட்லர் 15 பந்தில் 23 ரன் எடுத்து அக்சர் பட்டேல் பந்தில் கேட்ச் ஆக பில்சால்ட் 5 ரன்னில் பும்ரா பந்தில் போல்டானார். மொயின் அலி 8, போர்ஸ்டோ ரன் எதுவும் எடுக்காமல் அக்சர் பட்டேல் பந்தில் நடையை கட்டினார்.

பின்னர் வந்தவர்களில் ஹாரிஸ் புரூக் 25, சாம்கரன் 2, ஜோர்டன் 1 ரன்னில் குல்தீப் பந்தில் ஆட்டம் இழந்தனர். கடைசி விக்கெட்டாக ஆர்ச்சர் 21 ரன் எடுத்து பும்ரா பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். 16.4 ஓவரில் இங்கிலாந்து 103 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் 68 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. குல்தீப் 4 ஓவரில் 19 ரன் கொடுத்து 3, அக்சர் 23 ரன் கொடுத்து 3 விக்கெட்டும், பும்ரா 2 விக்கெட்டும் எடுத்தனர். அக்சர் பட்டேல் ஆட்டநாயகன் விருது பெற்றார். கடந்த 2022ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த டி.20 உலக கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்திடம் இந்தியா தோல்வி அடைந்து வெளியேறிய நிலையில் அதற்கு வட்டியும் முதலுமாக நேற்று பதிலடி கொடுத்தது. கடைசியாக 2014ம் ஆண்டு உலக கோப்பையில் இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்தியா, இலங்கையிடம் தோல்வி அடைந்த நிலையில் 10 ஆண்டுக்கு பின் டி.20 உலக கோப்பையில் பைனலுக்குள் நுழைந்துள்ளது. வெற்றிக்கு பின் இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது: இந்த வெற்றி மிகவும் திருப்தி அளிக்கிறது. ஒரு யூனிட்டாக கடுமையாக பயிற்சி செய்து வருகிறோம். வெஸ்ட் இண்டீசில் ஒவ்வொரு ஆடுகளமும் ஒவ்வொரு விதமாக செயல்படுகிறது. அதற்கு ஏற்றார் போல் மாற்றிக் கொள்கிறோம். இதுதான் அணியின் வெற்றிக்கு காரணமாக இருக்கிறது. களத்திற்கு ஏற்ப வீரர்கள் தங்களை மாற்றிக் கொண்டால் நிச்சயமாக வெற்றி கிடைக்கும்.

இன்று ஒரு கட்டத்தில் 140-150 ரன் அடித்தால் அதை தற்காத்து வெற்றிக்கு போராடலாம் என்று நினைத்தேன். எனினும் நானும் சூர்யாவும் பார்ட்னர்ஷிப் அமைத்ததன் மூலம் கூடுதலாக 25 ரன் கிடைத்தது. எனினும் இந்த இலக்கைதான் எட்ட வேண்டும் என்று எனக்கு மனதில் எப்போதுமே தோன்றும். ஆனால் நான் அதனை மற்ற பேட்ஸ்மேன்களிடம் திணிக்கமாட்டேன். ஏனென்றால் ஒவ்வொரு பேட்ஸ்மேன்களுக்கும் எந்த இலக்கு சரியானது என்று நன்றாகத் தெரியும். எனவே அவர்கள் இதுகுறித்து முடிவு எடுக்கட்டும் என்று நான் முழு சுதந்திரம் அளிப்பேன். இறுதிப்போட்டி என்பது மிகவும் மிகப்பெரிய தருணமாகும். எனினும் அதுபற்றி நாங்கள் ஓவராக சிந்திக்காமல், களத்தில் கவனம் செலுத்தி சரியான முடிவுகளை நாங்கள் எடுக்க வேண்டும். இன்று விக்கெட்டுகளை இழந்த போதும், எந்த பதற்றமும் அடையாமல் சரியாக ஆடினோம். இதுதான் வெற்றிக்கு முக்கிய காரணம். குல்தீப், அக்சர் இருவரும் சிறப்பான பவுலர்கள். அவர்களுக்கு எதிராக ஷாட்களை ஆடுவது கடினம். 2013ம் ஆண்டுக்கு பின் நாங்கள் ஐசிசி தொடரை வெல்லவில்லை. எனினும் இறுதிபோட்டியில் சிறந்த செயல்பாடு வெளிப்படுத்துவோம். அணியும் நல்ல ஒரு நிலையில் உள்ளது. நிச்சயமாக இறுதிப்போட்டியில் நாங்கள் நன்றாக விளையாடுவோம் என்று நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

The post இறுதி போட்டியிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்: கேப்டன் ரோகித்சர்மா நம்பிக்கை appeared first on Dinakaran.

Related Stories: