டி20 உலக கோப்பை 2வது அரை இறுதி போட்டி: இங்கிலாந்தை வீழ்த்தி பழிதீர்க்குமா இந்தியா?

கயானா: 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் லீக் மற்றும் சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. இந்தியா, ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில் இன்று காலை நடந்த முதல் அரையிறுதி போட்டியில் தென்ஆப்பிரிக்காவுடன் ஆப்கானிஸ்தான் படுதோல்வி அடைந்தது. இதன் மூலம் தென்ஆப்பிரிக்கா முதன்முதலாக இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில், இன்று இரவு 8 மணிக்கு வெஸ்ட் இண்டீசின் கயானா மைதானத்தில் நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்திய அணி லீக் சுற்றில் 3 வெற்றியுடன் 7 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது. சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் வங்காளதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது.

பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என அனைத்துத் துறைகளிலும் இந்திய அணி சிறந்து விளங்குகிறது. இதேபோல், இங்கிலாந்து அணி லீக் சுற்றில் 2 வெற்றியுடன் 5 புள்ளிகள் பெற்று 2வது இடத்தையும், சூப்பர் 8 சுற்றில் வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா ஆகிய அணிகளை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. கடந்த டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்திடம் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்க இந்திய அணி கடுமையாக போராடும். அதே நேரத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேற கடுமையாக முயற்சிக்கும் என்பதால் இன்றைய போட்டியில் அனல்பறப்பது நிச்சயம். இன்றைய போட்டியில் வெற்றிபெறும் அணி 29-ம் தேதி பார்படாசில் நடைபெற உள்ள இறுதி போட்டியில் தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்ளும்.

இதுவரை நேருக்கு நேர்

இதுவரை இரு அணிகளும் 23 டி.20 போட்டிகளில் மோதி உள்ளன. இதில் 12ல் இந்தியா, 11ல் இங்கிலாந்து வென்றுள்ளன. இதில் உலக கோப்பையில் மோதிய 4 போட்டியில் தலா 2ல் வென்றுள்ளன. கடந்த 2022ம் ஆண்டு டி.20 உலககோப்பை அரையிறுதியில் இந்தியா நிர்ணயித்த 169 ரன் இலக்கை விக்கெட் இழப்பின்றி இங்கிலாந்து வென்றது. அதற்கு வட்டியும் முதலுமாக இந்தியா இன்று பழிதீர்க்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

மழை அச்சுறுத்தல்…

போட்டி நடைபெறும் கயானாவில் இன்று மழைக்கு 70 சதவீதம் வாய்ப்பு இருக்கிறது. மழையால் ஆட்டம் தடைபட்டாலும் காலையில் போட்டி நடப்பதால் கூடுதலாக 4.10 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிலும் முடிவு கிடைக்காவிடில் சூப்பர் 8 சுற்றில் முதலிடம் பிடித்த இந்தியா இறுதி போட்டிக்கு தகுதிபெறும்.

பிட்ச் ரிப்போர்ட்

இங்கு இதுவரை 18 டி.20 போட்டி நடந்துள்ளது. இதில் முதலில் பேட் செய்த அணி 6, சேசிங் அணி 9ல் வென்றுள்ளன. முதலில் பேட் செய்த அணியின் சராசரி ஸ்கோர் 133. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 2010ல் இங்கிலாந்து 191/5 ரன் எடுத்தது தான் அதிகபட்சம். பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருக்கும்.

The post டி20 உலக கோப்பை 2வது அரை இறுதி போட்டி: இங்கிலாந்தை வீழ்த்தி பழிதீர்க்குமா இந்தியா? appeared first on Dinakaran.

Related Stories: