உலக கோப்பை வரலாற்றில் முதல்முறையாக பைனலில் தெ.ஆ: அதிசயம்…. ஆனால் உண்மை

டரோபா: பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் தென் ஆப்ரிக்கா-ஆப்கானிஸ்தான் இடையிலான முதல் அரையிறுதி ஆட்டம் டிரினிடாட்டின், டரோபா நகரில் நேற்று நடந்தது. அதில் டாஸ் வென்ற ஆப்கான் பெரும் நம்பிக்கையுடன் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் ஓவரின் கடைசி பந்தில் நட்சத்திர வீரர் ரகமனுல்லா குர்பாசை டக் அவுட் செய்தார் யான்சென். அதன் பிறகு ஆப்கான் வீரர்கள் அவசர,அவசரமாக பெவிலியன் திரும்பிய வண்ணம் இருந்தனர். பவர் பிளே முடிவதற்குள் 5ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்தனர்.

அதற்கு கேப்டன் ரஷீத்கானும் விதிவிலக்கல்ல. முதல் முறையாக உலக கோப்பை அரையிறுதியில் விளையாடும் ஆப்கான் வீரர்களை தங்கள் பந்து வீச்சால் தெ.ஆ மிரட்டியது. அதனால் ஆப்கான் 11.5ஓவரிலேயே 56ரன்னுக்கு அடங்கியது. அந்த அணியில் அதிகபட்சமாக ஒமர்சாய் 10, கரீம், ரஷீத் தலா 8ரன் எடுத்தனர். தெ.ஆ வீரர்கள் யான்சென், ஷம்சி தலா 3, ரபாடா, நார்ட்ஜே தலா 2 விக்கெட் அள்ளினர்.

அதனையடுத்து 57ரன் எடுத்தால் முதல் முறையாக உலக கோப்பை பைனலுக்கு முன்னேறலாம் என்ற இலக்குடன் தெ.ஆ விளையாடத் தொடங்கியது. ஆனால் நவீன் உல் ஹக்கின் முதல் ஓவரில் தெ.ஆ ஒரு ரன் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து 2வது ஓவரை வீசிய ஃபசுல்லா தனது 5 வது பந்தில் டி காக்கை போல்டாக்கினார். அடுத்து 3வது ஓவரில் நவீன் மீண்டும் ஒரு ரன் மட்டும் தர ஆப்கான் தரப்பு உற்சாகமானது. தெ.ஆ அணியின் முதல் பவுண்டரி ஹெண்ட்ரிக்ஸ் மூலம் 4வது ஓவரின் கடைசி பந்தில் தான் கிடைத்தது.

அடுத்த ஓவரில் கேப்டன் மார்கரமும் 2வது பவுண்டரி விளாசினார். எளிய இலக்கு என்றாலும் தெ.ஆ தட்டு தடுமாறி ரன் சேர்த்தது. எனினும் 9வது ஓவரில் மார்க்ரம்-ஹெண்ட்ரிக்ஸ் இணை 16ரன் குவித்து இலக்கை கடந்தது. அதனால் தெ.ஆ 8.5வது ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 60 எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை வசப்படுத்தியது. கூடவே வரலாற்றில் முதல் முறையாக தெ.ஆ, உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் விளையாட தகுதிப் பெற்றுள்ளது. ஹெண்ட்ரிக்ஸ் 29 (25பந்து, 3பவுண்டரி, 1சிக்சர்), மார்க்ரம் 23(21பந்து, 4பவுண்டரி) ரன் விளாசி கடைசி வரை களத்தில் இருந்தனர். பைனல் வாய்ப்பை இழந்த ஆப்கான் வீரர்கள் சோகத்துடன் வெளியேறினர்.

இதுவும் வரலாறு
* தெ.ஆ-விடம் விளையாடிய 3டி20 ஆட்டங்களிலும் ஆப்கான் தோற்றுள்ளது.

* இந்த தொடரில் 17விக்கெட் வீழத்தி, உலக கோப்பை போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஆப்கான் வீரர் ஃபசுல்லா முதல் இடத்தில் தொடர்ந்தார்.

* டி20 உலக கோப்பைகளில் 3வது அரையிறுதியில் விளையாடிய தெ.ஆ முதல் முறையாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி இருக்கிறது.

* ஒருநாள் உலக கோப்பைகளில் இதுவரை 9 முறை விளையாடிய தெ.ஆ 5 முறை அரையிறுதிக்கு முன்னேறியது. அவற்றில் ஒரு முறை கூட இறுதி ஆட்டத்துக்கு முன்னேறவில்லை.

* இதுவரை நடந்துள்ள 2 டெஸ்ட் உலக கோப்பைகளிலும் இறுதி ஆட்டத்துக்கு தெ.ஆ முன்னேறியது இல்லை.

* இந்த ஆட்டத்தில் ஆப்கான் வீரர்கள் ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை. ஆனால் 7பவுண்டரிகளை விளாசினர்.
தெ.ஆ 8 பவுண்டரிகளையும், ஒரே ஒரு சிக்சரும் வெளுத்தது.

* தெ.ஆ வீரர் ரபாடா தான் வீசிய 3 ஓவர்களில் ஒரு மெய்டன் ஓவரையும் வீசினார்.

* ஐசிசி ஏற்கனவே திட்டமிட்டபடி இந்தியா- இங்கிலாந்து இடையிலான ஆட்டம் தான் முதல் அரையிறுதி ஆட்டமாக நேற்று காலை டரோபாவில் நடந்திருக்க வேண்டும். அந்த நேரத்தில் ஆட்டத்தை நடத்தினால், இந்தியாவில் காலையில் ஒளிபரப்பு செய்ய வேண்டி இருக்கும். அதனால் இந்தியா-இங்கிலாந்து இடையிலான அரையிறுதி 2வது ஆட்டமாக கயானாவுக்கு மாற்றப்பட்டது. அதுவும் தங்கள் தோல்விக்கு காரணம் என்று ஆப்கான் தரப்பு புலம்பி வருகிறதாம்.

* வென்றாக வேண்டும் என்ற ஆசையில் சக வீரர்களிடம் ஆப்கான் கேப்டன் ரஷீத்கான் அளவுக்கு மீறி கடுமையாக நடந்துக் கொண்டதும், தெ.ஆ வீரர் நார்ட்ஜேவிடம் முறைத்துக் கொண்டதும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

The post உலக கோப்பை வரலாற்றில் முதல்முறையாக பைனலில் தெ.ஆ: அதிசயம்…. ஆனால் உண்மை appeared first on Dinakaran.

Related Stories: