டைப்ஸ்! ட்ரீட்மென்ட்ஸ்!

நன்றி குங்குமம் டாக்டர்

போபியா ஆயிரம்

பயம் என்பது மனிதனின் ஆதி உணர்ச்சிகளில் ஒன்று. அன்னையின் வயிற்றில் கருவாய்த் திரளும்போதே ஒருவருக்கு பய உணர்வும் தோன்றிவிடுகிறது.

அங்குள்ள இருளான சூழல், அன்னையின் இதயத்துடிப்பு, வெளியே கேட்கும் புரியாத ஓசைகள், காதில் ஒலிக்கும் அன்னையின் இரத்த ஓட்டத்தின் ஓசை என எல்லாம் சேர்ந்து ஒரு புதிர்மையான நம்மால் புரிந்துகொள்ள முடியாத ஓர் இடத்தில் இருக்கிறோம் என்ற உணர்வைத் தோற்றுவிக்கும். இந்த எண்ணம் ஆழ்மனதில் இனம்புரியாத பயமாக உறைந்திருக்கிறது. இந்த பயம் எல்லோருக்கும் உள்ளார்ந்து இருக்கவே இருக்கும், சிலருக்கு மட்டும் இந்த பயம் குறிப்பிட்ட விஷயங்கள் மீதான பயமாய் மாறிவிடும்.

சிலருக்கு இருளைக் கண்டால் பயம், சிலருக்கு நாயைக் கண்டால் பயம், சிலருக்கு கரப்பான்பூச்சியைக் கண்டால் பயம், சிலருக்கு உயரம் பயம், சிலருக்கு இடி மின்னல் பயம் இப்படி பலவகையான பயங்கள் உள்ளன. நவீன மருத்துவம் நானூறு வகையான போபியாக்களைப் பட்டியலிடுகிறது. இதில் முக்கியமான சில போபியாக்கள் பற்றி இங்கு காண்போம்.

சைனோபோபியா

நாயைக் கண்டால் உருவாகும் பயம் இது. சின்ன நாயோ பெரிய நாயோ அதைக் கண்டாலே அலறுவார்கள். தெருவில் செல்லும்போது நாய் அருகில் வந்தாலே ஓடிவிடுவார்கள். சிறு வயதில் ஏற்பட்ட சில அதிர்ச்சியான விஷயங்கள் மனதை பாதிப்பதால் இப்பயம் உருவாகிறது.

அக்ரோ போபியா

உயரத்தைக் கண்டால் வரக்கூடிய பயம் இது. விமானத்தில் பறப்பதற்கு பயப்படுவதும் இதே வகைதான். இவர்களுக்கு சிறிய நாற்காலியில் ஏறி நிற்பதற்கும் கூட பயம் இருக்கும். உயரத்தில் இருந்து கீழே பார்த்தால் தலை சுற்றி மயக்கமாகிவிடுவார்கள். புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் ஹிட்ச்காக் இயக்கிய ‘வெர்டிகோ’ படத்தில் நாயகனுக்கு இருப்பது இந்தவகை பயமே.

கிளாஸ்ட்ரோபோபியா

குறுகலான இடைவெளி, சந்து, மேலே உயரம் குறைவாக உள்ள இடங்களில் சிலருக்கு பயம் ஏற்படும். காருக்குள் இருக்கும் போது வாந்தி வருவது, லிப்ட்டில் செல்ல பயம் கொள்வது, எஸ்கிலேட்டரில் செல்ல பயம்கொள்வது, சுரங்கப்பாதை அல்லது குறுகலான வழித்தடங்களில் நடக்க பயம்கொள்வது எல்லாம் இந்த வகை பயம்தான்.

ஹீமோபோபியா

இரத்தத்தைப் பார்த்தால் பயம் கொள்வதை ஹீமோபோபியா என்பார்கள். சாதாரணமாக கையில் ஊசியிட்டு ரத்தம் பரிசோதனை செய்ய வேண்டும் என்றாலும் இவர்கள் மயங்கிவிடுவார்கள். ஒரு துளி ரத்தம் கூட இவர்கள் பார்க்கக் கூடாது. பெரும் விபத்துகள் நடக்கும் இடங்களில் இவர்கள் இருந்தால் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

நெக்டோபோபியா

இருட்டில் இருக்கும்போது பயம் ஏற்படுவதை நெக்டோபோபியா என்கிறோம். இந்த பயம் எல்லோருக்குமே உள்ளார்ந்து இருக்கும். பெரும்பாலும் தனிமையில் இருக்கும்போதே இந்த பய உணர்வு கடுமையாக ஆட்கொள்ளும். இருட்டில் பேய், பிசாசுகள் இருப்பது போலவும், ஏதேதோ உருவங்கள் அசைவது போலவும் டெல்யூசன்கள் தோன்றும். சிறு வயதில் ஏற்பட்ட அனுபவங்களே இப்பயம் உருவாகக் காரணம். பெரும்பாலும் தனிமையில் இருந்தவர்களுக்கு ஒரு கட்டத்தில் இந்த பயம் உருவாகும். இவர்கள் தனியாக இல்லாமல் இருப்பது நல்லது.

ஒபிடியோபோபியா

பாம்பு, பல்லி, கரப்பான்பூச்சி, சிலந்தி போன்றவற்றைக் கண்டால் உருவாகும் இனம் புரியாத பயம் இது. சிலருக்கு இது பயமாக இருக்காது. ஒருவகை ஒவ்வாமையாக அருவருப்பாக இருக்கும். பெரும்பாலும் பெண்களுக்கு இந்த வகை போபியா அதிகம் இருக்கும். வீடுகளுக்குள் இருக்கும் கரப்பான்கள், பல்லிகளைப் பார்த்தால் அலறி நடுங்குவார்கள்.

நெக்ரோபோபியா

மரண பயம் என்போம் இல்லையா அதுதான் நெக்ரோபோபியா. சாவை நினைத்துப் பயப்படுவார்கள். தாம் இறந்துவிடுவோமோ என்ற பயம் இருக்கும். அடிக்கடி உடல் நலம் குறித்த கவலை இருக்கும். திடீரென இறந்துவிட்டால் என்ன ஆகும் என்று பகல் கனவு காண்பார்கள். அதை நினைத்து பயப்படுவார்கள். இழவு வீடுகளுக்குச் செல்வது, சவப்பெட்டிகளைப் பார்ப்பது, சுடுகாட்டுக்குச் சென்று கல்லறைகளைப் பார்ப்பது எல்லாமே இவர்களுக்கு பயமாய் இருக்கும்.

ஈனோக்ளோபோபியா

கூட்டத்தைப் பார்த்தாலே சிலருக்கு பயமாக இருக்கும். கும்பலான இடங்கள், நெரிசலான மக்கள் கூடும் வெளிகள், திருவிழாக்கள், ரயில் நிலையங்கள், மாநாடுகள், விளையாட்டு மைதானங்கள் போன்ற இடங்களுக்குச் செல்ல பயப்படுவார்கள். இன்றோவெர்ட் என்று சொல்லப்படும் தன்னுள்ளேயே சுருங்கி இருக்கும் தனியர்களுக்கு இந்த வகை பயம் இருக்கும். இவர்களுக்கு கும்பல் என்றில்லை நான்கைந்து பேர் சேர்ந்து இருந்தாலே சங்கோஜமாக இருக்கும். எப்படா அந்த இடத்தை விட்டு நகர்வோம் என்று இருக்கும். சட்டென தனிமைக்குள் நுழைந்து தன்னை ஒழித்துக்கொள்வார்கள்.

அடிச்சிபோபியா

சிலருக்கு தோல்வி கண்டு பயம் இருக்கும். தோற்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அது அவர்கள் ஈகோவுக்கு இழுக்கு என நினைப்பார்கள். எனவே, போட்டிகளில் கலந்துகொள்ள மாட்டார்கள். சாதாரணமாக வீட்டில் விளையாடும் கேரம், செஸ், சீட்டுக்கட்டு போன்ற விளையாட்டுகளில்கூட கலந்துகொள்ள மாட்டார்கள். எவரோடும் போட்டியிட மாட்டார்கள்.

ஹைட்ரோபோபியா

சிலருக்கு தண்ணீர் என்றாலே பயம் இருக்கும். சிறிய அளவிலான தண்ணீர் அவர்களை பயமுறுத்தாது, குளம், ஏரி, ஆறு, கடல் போன்ற பெரிய நீர் பரப்புகளைக் கண்டால் பதட்டமாகிவிடுவார்கள். கடல் அருகே செல்லும்போதே சுனாமி வந்திடும் என்று நடுங்குவார்கள். ஆற்றில் சுழல் இருக்கும் என்று நடுங்குவார்கள். நீர்நிலைகள் பக்கமே செல்லமாட்டார்கள்.

கேமோபோபியா

திருமணம், இல்வாழ்க்கை, இணையோரோடு வாழ்வது என்ற உறவுநிலைகளே சிலருக்கு பயத்தைக் கொடுக்கும். திருமண பந்தம் தொடர்பாய் நிறைய குழப்பமான சிந்தனைகள் இருக்கும். அதனால் மணம் செய்யவே அஞ்சுவார்கள். சிறுவயதில் ஏற்பட்ட சிக்கலான மன உணர்வுகள், பெற்றோருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் போன்றவற்றைப் பார்த்து இந்த போபியாவை வளர்த்துக்கொள்வார்கள்.

லிக்கியோபோபியா

மகப்பேறுக்கு பயப்படுவதுதான் இந்த போபியா. பெரும்பாலும் இளம் பெண்களுக்கு இந்த பயம் இருக்கும். குறிப்பிட்ட வயதில் இந்த பயம் உருவாகி பின்னர் இயல்பான தாய்மைக்கான வேட்கையால் இந்த போபியா வெல்லப்படும் என்றாலும் சிலருக்கு அழுத்தமாக இந்த பயம் இருக்கும். அதற்குக் காரணம் சிறுவயதில் அவர்களுக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்கள்தான். யாராவது பெரியவர்கள் மகப்பேற்றின் போது இறப்பதையோ சிரமப்படுவதையோ பார்த்திருப்பார்கள். அதனால் உருவான போபியா இது.

சிகிச்சை என்ன?

பொதுவாக போபியாக்களுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளும் பழக்கம் நம் நாட்டில் இல்லை. மேலை நாடுகளில்கூட நான்கில் ஒரு பகுதியினர்தான் சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள். சிலருக்கு இந்த போபியா கடுமையாக இருக்கும். அவர்கள் நிச்சயம் உளவியல் நிபுணரை நாடி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். உதாரணமாக, திருமண பயம், மகப்பேறு பயம் போன்ற போபியா உள்ளவர்கள் நிச்சயம் ஒரு மனநல மருத்துவரை நாடுவது நல்லது. சிலவகை போபியாக்கள் அந்த சூழலில் வாழ வேண்டிய நிர்பந்தம் இருக்கும்போது சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். உதாரணமாக, விமானத்தில் பறப்பது, நாய் பயம் போன்ற போபியா உள்ளவர்கள் அடிக்கடி பயணிக்க வேண்டிய சூழலில் இருந்தாலோ வளர்ப்புப் பிராணிகளோடு வாழ வேண்டிய சூழலில் இருந்தாலோ இந்த போபியாவுக்கு சிகிச்சை எடுப்பது நல்லது.

முதல் கட்டமாக மருத்துவர் காக்னிட்டிவ் தெரப்பி என்ற சிகிச்சை தருவார். இது அந்த போபியா பற்றிய பேச்சாக இருக்கும். தினசரி வாழ்வில் அந்த போபியா ஒருவரை எப்படி பாதிக்கிறது. அது எப்படி உருவாகிறது. அதைத் தடுக்க என்ன செய்கிறீர்கள் என்பதை நோயாளியிடம் கேட்டறிந்து, எப்படி நடந்துகொள்ள வேண்டும், எப்படி உணர்வுகளைக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்பதை எல்லாம் உளவியல் நிபுணர் விளக்குவார். இதுவே காக்னிடிவ் தெரப்பி. அவசியம் எனில் சிலவகை மருந்துகளையும் பரிந்துரைப்பார். உதாரணமாக இருள் பயம் இருப்பவர்களுக்கு இரவில் உறங்க மருந்து எழுதித் தருவார். மற்ற பயங்கள் இருப்பவர்களுக்கும் அதற்கான உடலியல் விளைவுகளை கட்டுப்படுத்த மருந்துகள் தருவார்.

போபியா டேட்டா

*ஒரு விஷயத்தைக்கண்டு உருவாகும் உச்சக்கட்ட பயம், போபியா என்று கூறப்படுகிறது. இது தலைமுறைகளாக டி.என்.ஏ.வில் பதிவாகியிருக்கும் நினைவுகளால் ஏற்படுகிறது என்று புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

*பொதுவான போபியாக்கள் உலக மக்கள் தொகையில் 3% பேருக்கு உள்ளன.

*போபியா பாதிக்கப்பட்டவர்களில் 23% பேர் தனது பயத்துக்குச் சிகிச்சை எடுத்துக் கொள்கிறார்கள்.

*உலகில் கண்டறியப்பட்டுள்ள போபியாக்கள் சுமார் 400.

*80% போபியாக்களுக்குத் தீர்வு அளிக்கும் முறைகள் கண்டறியப்பட்டுள்ளன.

*போபியாக்களால் அதிகம் பாதிக்கப்படும் பாலினம்

*ஆண்கள் – 21.2%

*பெண்கள் – 10.9%

*சிலந்திகளைக் கண்டு பயப்படும் அரச்னோபோபியா போபியாக்களில் முதலிடம் வகிக்கிறது. சுமார் 17 மில்லியன் பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

*சில குறிப்பிட்ட வகை போபியாக்களினால் பாதிக்கப்படுபவர்கள்.

*பெண்கள் – 26.5%

*ஆண்கள் – 12.4 %

*போபியா பாதிக்கப்பட்டவர்களில் 40% பேருக்கு 10 வயதிலேயே அது குறித்த பயம் துவங்கிவிடுகிறது.

*95 % பேருக்கு 20 வயதுக்கு உள்ளாகவே அது குறித்த பயம் துவங்கிவிடுகிறது.

தொகுப்பு: இளங்கோ கிருஷ்ணன்

The post டைப்ஸ்! ட்ரீட்மென்ட்ஸ்! appeared first on Dinakaran.

Related Stories: