மானுடம் போற்றும் மகத்தான சேவை… புற்றுநோயாளிகள் பராமரிப்பு!

நன்றி குங்குமம் டாக்டர்

தீவிர புற்றுநோய் பாதிப்புக்குள்ளானவர்கள் மற்றும் தினசரி டயாலிசிஸ் செய்ய வேண்டிய சூழ்நிலையில் இருப்பவர்கள் பலர் வறுமை காரணமாக தேவையான சிகிச்சை எடுத்துக்கொள்ள இயலாத சூழ்நிலையில் இருப்பார்கள். அதுபோன்றோருக்கு தேவையான மருத்துவ சிகிச்சை மற்றும் தங்கும் வசதியை கடந்த பத்து ஆண்டுகளாக முற்றிலும் இலவசமாக அளித்து நோயுற்றவர்களை பராமரித்து வழிநடத்தி வருகிறார் ஸ்ரீ மாதா கேன்சர் கேர் நிறுவனர் டாக்டர். விஜயஸ்ரீ மகாதேவன். இவரது பணி குறித்து நம்முடன் பகிர்ந்து
கொண்டவை:

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு முற்றிய நிலையில் தங்களது இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருப்பவர்கள் தினசரி உடல் ரீதியான பலவித வலிகளை அனுபவிப்பார்கள். அவர்களுக்கு வலி நிவாரண மருந்துகளை அளிக்கும் சிகிச்சையை பெலியேட்டிவ் கேர் என்பார்கள். இந்த பெலியேட்டிவ் கேர் சிகிச்சையைத்தான் நாங்கள் வழங்கி வருகிறோம்.

அதுபோன்று, சிறுநீரகம் பாதிக்கப்பட்டு தினசரி டயாலிசிஸ் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலையில் இருப்பவர்கள் பலருக்கு அதற்கான வசதியிருக்காது. அதுபோன்று வசதியில்லாதவர்களுக்கும் முற்றிலும் இலவசமாக டயாலிசிஸ் செய்து வைக்கிறோம். இதுவே எங்களது கேன்சர் கேரின் முக்கிய பணியாகும். மாதா கேன்சர் கேர் என 2013 -இல் தொடங்கி அதிலிருந்து கடந்த பத்து ஆண்டுகளாக இதனை நடத்தி வருகிறேன். இந்த கேன்சர் கேரை தொடங்கியபோது, புற்றுநோய் முற்றிய நிலையில் இருப்பவர்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்கு உரியதாக இருப்பதை கவனித்தேன். அதனால், அவர்களுக்கான தேவைகளை வழங்க வேண்டும் என்று எண்ணினேன்.

பொதுவாக, அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய்க்காக சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் ஒருவருக்கு நோய் முற்றிய நிலையில், அதன்பிறகு எவ்வளவு நாட்கள் அவர் உயிரோடு இருப்பார் என்பது தெரியாது. அந்நிலையில், அரசு மருத்துவமனையில் இருந்து எங்களிடம் அனுப்பி வைப்பார்கள். அப்படி வருவோருக்கு தேவையான வலிநிவாரண மருத்துவ உதவிகளும், உணவுடன் தங்கும் வசதியும் இலவசமாக அளித்து அவர்கள் வாழும் காலம் வரை ஒரு அமைதியான சூழ்நிலையை உருவாக்கித் தருகிறோம். இதில் ஆதரவற்ற நிலையில் இருப்பவர்கள் இறந்துவிட்டால், அவர்களின் இறுதிச் சடங்குகளையும் நாங்களே செய்து வைக்கிறோம். அவர்களின் ஈமச்சடங்கள் அனைத்தையும் எனது தந்தை வ.துரை தான் செய்துவைக்கிறார்.

பொதுவாக இவர்கள் மருத்துவமனையில் இருந்து வரும்போது, மருத்துவர்கள் குறைந்தபட்சம் ஆறுமாத காலக்கெடு கொடுப்பார்கள். ஆனால், நமது இல்லத்திற்கு வந்தபிறகு, அவர்கள், ஒரு வருடம் அல்லது ஒன்றரை வருடம் கூட இருப்பார்கள். ஒருசிலர் வந்த ஓரிரு வாரங்களிலும் மரணத்தை தழுவுவார்கள். அது நமது கையில் இல்லை .ஆனால், அவர்கள் வாழும் காலம் வரை பசியில்லாத, வலியில்லாத ஒரு அமைதியான வாழ்க்கை அவர்களுக்கு தர வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்.

எங்கள் அறகட்டளையில், தற்போது சுமார் ஐம்பது படுக்கைகள் இருக்கின்றன. கூடுதலாக மேலும் பத்து படுக்கைகள் கூட உருவாக்கலாம். ஆனால், அதற்குமேல் எங்களால் விரிவுபடுத்த முடியவில்லை. ஏனென்றால் இவர்களின் செலவுகளுக்கே நாங்கள் ஸ்பான்ஸர்களை நம்பித்தான் செய்து வருகிறோம். எனவே, கூடுதல் ஸ்பான்ஸர் கிடைத்தால், மேலும் பலருக்கு நாங்கள் உதவ முடியும். இப்போதைக்கு 25-30 பேர் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்காகவே, ஒரு வைப்புநிதியை உருவாக்க முன்னெடுத்து வருகிறோம். அப்படி குறிப்பிட்ட ஒரு தொகையை வைப்பு நிதியாக உருவாக்கிவிட்டால், எந்தவித அச்சமுமின்றி அவர்களது தேவைகளை கவனித்துக் கொள்ள முடியும்.

அது போன்று சிறுநீரக பாதிப்பினால், தினமும் டயாலிசிஸ் செய்து கொள்ளும் நிலையில் இருந்தால், அவர்களுக்கு வாரத்திற்கு 5 முதல் 7 ஆயிரம் வரை செலவு ஆகும். வசதியில்லாத குடும்பங்களில் இது சாத்தியமில்லை. இதனால், பலரும் மரணத்தை தழுவுகின்றனர். எனவே தான் டயாலிசிஸ் சிகிச்சையையும் வழங்கி வருகிறோம். இரண்டு பணியுமே மிக கடினமான ஒன்றுதான். ஆனாலும் என்னால் முடிந்த உதவிகளை இயலாதவர்களுக்கு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இதனை செய்து வருகிறேன். எனது குடும்பமே இந்த பணியில் நான் ஈடுபட எனக்கு பெரும் உதவியாக இருந்து வருவதனால்தான் இவை எல்லாம் எனக்கு சாத்தியமாகிறது.

தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்

The post மானுடம் போற்றும் மகத்தான சேவை… புற்றுநோயாளிகள் பராமரிப்பு! appeared first on Dinakaran.

Related Stories: