திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சேதமடைந்த கோபுரத்தினை புனரமைக்கும் பணி ரூ.94 லட்சத்தில் மேற்கொள்ளப்படும்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

திருச்சி: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் இன்று திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம், அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் சமீபத்தில் சேதமடைந்து பெயர்ந்து விழுந்த கிழக்கு கோபுரத்தின் மேற்கு பகுதி முதல் நிலை கொடுங்கையினை புனரமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை நேரில் ஆய்வு செய்து, அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினர்.

பின்னர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; ஸ்ரீரங்கம், அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலின் கோபுரங்களில் ஒன்றான தாமோதர கிருஷ்ணன் கோபுரம் நேற்றைக்கு முன்தினம் அதிகாலையில் கொடுங்கையின் ஒரு பகுதி விழுந்ததால் உடனடியாக மாற்று ஏற்பாடுகள் செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க, அன்றைய தினமே மாவட்ட அமைச்சர் நேரு, துறை ஆணையாளர், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோரும் கொடுங்கை இடிந்து விழுந்த பகுதிக்கு வந்து ஆய்வினை மேற்கொண்டதோடு, ஒட்டுமொத்தமாக இந்த திருக்கோயிலிருக்கின்ற 21 கோபுரங்களையும் என்ஐடி(NIT) மூலம் ஆய்வினை மேற்கொள்வதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் நேற்றைய தினம் இந்த கோபுரத்தை NITயினர் ஆய்வு செய்துள்ளனர். அறிக்கையினை ஓரிரு நாளில் தருவதாக கூறி இருக்கின்றார்கள். இந்த கோபுரம் மட்டுமல்லாமல் 21 கோபுரங்களையும் ஆய்வு செய்து அதன் உறுதித்தன்மை குறித்து அறிக்கையை கேட்டிருக்கின்றோம், அவ்வறிக்கையினை பெற்றவுடன் பணிகள் மேற்கொள்ளப்படும். 2015 ஆம் ஆண்டில் இந்த கோபுரம் ரூ. 35 லட்சம் செலவில் பழுதுபார்க்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கோபுரம் சிதிலமடைந்து இருக்கின்றது என்று ஊடகத்தின் வாயிலாக வந்த செய்தியை அறிந்து ரூ. 94 லட்சம் செலவில் மராமாத்து பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த கோபுரம் செடிகளால் சிதிலமடைந்திருப்பதால் முழுமையாக இந்த கோபுரத்தில் பராமரிப்புப் பணி மேற்கொள்ள ரூ. 2 கோடி செலவாகும் என்று கூறியிருக்கின்றார்கள். அதற்கு தேவையான நிதி திருக்கோயிலிலேயே இருப்பதாலும், அதே நேரத்தில் நன்கொடையாளர்களும் இந்த பணிகளை மேற்கொள்ள தயாராக இருப்பதாலும் மாவட்ட அமைச்சர்களோடு கலந்தாலோசித்து நன்கொடையாளர்கள் வாயிலாகவோ அல்லது திருக்கோயில் நிதி வாயிலாகவோ இந்த பணிகள் மேற்கொள்ளப்படும்.

இதனை தொடங்குவதற்குண்டான அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் விரைவாக மேற்கொள்ளப்படும். சுதை வேலைகள் அதிகமிருப்பதால் இந்த பணி நிறைவுற ஓராண்டு காலமாகும் என்று கூறி இருக்கின்றார்கள். NITயின் அறிக்கைக்கு பின் பிற கோபுரங்களிலும் ஏதாவது மராமத்து பணி தேவை என்றால் அதனையும் உடனடியாக மேற்கொள்வதற்குண்டான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். ஒரு பணியை மேற்கொள்ள வேண்டும் என்றால் ஆய்வு செய்து, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து ஒப்பந்தப்புள்ளி கோரப்படும். அதற்கு பின்னர் தான் பணிகள் தொடங்கப்படும். இந்த பணியினை பொறுத்தளவில் கோபுரம் சிதிலமடைந்துள்ளதால் பாதுகாப்பு கருதி அன்றைய தினம் முதலே பணிகளை மேற்கொண்டு வருகிறோம். தற்போது ரூ. 94 லட்சம் செலவில் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப் குமார், இ.ஆ.ப., சட்டமன்ற உறுப்பினர் மொ.பழனியாண்டி, மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் டாக்டர் இரா. வைத்திநாதன், இ.ஆ.ப., மண்டலக் குழுத் தலைவர் ஆண்டாள் ராம்குமார், இணை ஆணையர்கள் ஏ.ஆர். பிரகாஷ், எஸ். செல்வராம்குமார், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சேதமடைந்த கோபுரத்தினை புனரமைக்கும் பணி ரூ.94 லட்சத்தில் மேற்கொள்ளப்படும்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: