திருக்கனூர் அருகே வீடு புகுந்து துணிகரம்; மாஜி ஊராட்சி தலைவரை கத்தி முனையில் மிரட்டி ₹7 லட்சம் நகை, பணம் கொள்ளை: மர்ம பெண் உள்ளிட்ட 2 பேருக்கு வலை

திருக்கனூர்: திருக்கனூர் அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் கத்தியை காட்டி மிரட்டி ரூ.7 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். புதுவை மாநிலம் திருக்கனூர் அருகே விநாயகம்பட்டு அய்யனார் கோயில் தெருவை சேர்ந்தவர் காளிதாஸ் (58). முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவர். இவர் நேற்று முன்தினம் தனது குடும்பத்துடன் காரைக்கால் திருநள்ளாறில் உள்ள சனீஸ்வர பகவான் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்ட நேற்றிரவு வீடு திரும்பினார்.

அப்போது, கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்றபோது திடீரென மர்ம நபர் ஒருவர், கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன காளிதாஸ், அலறிளடித்து வெளியே ஓடி வந்தார். அப்போது ஒரு பெண் வீட்டின் பின்புற தோட்டத்தின் வழியாக தப்பி ஓடினார். இதற்கிடையில் காளிதாஸ் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனே மர்ம நபரும் ஓட்டம் பிடித்தார். பின்னர் காளிதாஸ், வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அலமாரி உடைக்கப்பட்டு சுமார் 6 பவுன் நகை ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து திருக்கனூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கத்தி, துணி உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றினார். கைரேகை நிபுணர்களை வரவழைத்து ரேகை பதிவுகளை பதிவு செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மர்ம ஆசாமி, மர்ம பெண் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர். கொள்ளை போன நகைகள், பணத்தின் மதிப்பு ரூ.7 லட்சம் ஆகும். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post திருக்கனூர் அருகே வீடு புகுந்து துணிகரம்; மாஜி ஊராட்சி தலைவரை கத்தி முனையில் மிரட்டி ₹7 லட்சம் நகை, பணம் கொள்ளை: மர்ம பெண் உள்ளிட்ட 2 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: