திருமணம் செய்வதாக கூறி பணம், நகை மோசடி செய்ததுடன் காதலியை சாதி பெயரை சொல்லி திட்டிய நபருக்கு 5 ஆண்டு சிறை: எஸ்.சி, எஸ்.டி வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: திருமணம் செய்வதாக கூறி பெண்ணை ஏமாற்றியதுடன், சாதி பெயரை சொல்லி திட்டிய நபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வியாசர்பாடி பகுதியை சேர்ந்த பட்டியல் வகுப்பை சேர்ந்த பெண்ணுக்கும், பொன்னேரியை சேர்ந்த ரமேஷ் (46) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், இருவருக்கும் நெருக்கம் அதிகமானது. அப்போது, அந்த பெண்ணை திருமணம் செய்வதாக ரமேஷ் உறுதியளித்துள்ளார்.

இதையடுத்து, இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். பின்னர், கடந்த 2020 செப்டம்பர் 3ம் தேதி, தன்னை திருமணம் செய்யும்படி அந்த பெண் கேட்டபோது, ரமேஷ் மறுத்ததுடன், சாதி பெயரை கூறி திட்டியுள்ளார். மேலும், இருவரும் தனிமையில் இருந்தபோது, ரகசியமாக எடுத்த ஆபாச வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டியதுடன், அந்த பெண்ணிடம் நகை மற்றும் பணத்தை ரமேஷ் பறித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண், இதுகுறித்து எம்.கே.பி.நகரில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், மோசடி மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவுகளில் ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் (முதன்மை அமர்வு நீதிமன்றம்) நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் எம்.சுதாகர் ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் சாட்சிகள் மற்றும் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் ரமேசுக்கு மோசடி, வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகியவற்றில் தலா 5 ஆண்டுகளும், வன்கொடுமை தடுப்பு சட்ட மற்றொரு பிரிவில் 3 ஆண்டுகளும் ரூ.15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

The post திருமணம் செய்வதாக கூறி பணம், நகை மோசடி செய்ததுடன் காதலியை சாதி பெயரை சொல்லி திட்டிய நபருக்கு 5 ஆண்டு சிறை: எஸ்.சி, எஸ்.டி வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: