* கைதான கேரளா புரோக்கரிடம் போலீசார் விசாரணை
* என்ஐஏ புகாரால் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்
சென்னை: கலைநிகழ்ச்சி என ஒப்பந்த முறையில் பிரபல நடிகைகள் உள்பட 50க்கும் மேற்பட்ட இளம்பெண்களை அழைத்து சென்று, துபாயில் நட்சத்திர ஓட்டல்களில் அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பல கோடி சம்பாதிக்கும் பெண் உள்பட 3 புரோக்கர்களை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தமிழ்நாடு காவல்துறைக்கு கடந்த மே 29ம் தேதி தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மூலம் புகார் ஒன்று வந்தது. அதில், துபாயில் சட்டவிரோதமாக கலை நிகழ்ச்சி என்று நடிகைகள் மற்றும் நடன கலைஞர்களான இளம்பெண்களை அழைத்து சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், எனவே சென்னையில் இருந்து அழைத்து சென்ற நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
புகாரின் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் அருண், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் செந்தில் குமாரி மேற்பார்வையில் மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனரும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனரான வனிதா தலைமையில் விபசார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் ராஜலட்சுமி தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர். அதில், சென்னையில் இருந்து சட்டவிரோதமாக சினிமா குறும்பட இயக்குநர்கள் மூலம் கலை நிகழ்ச்சி மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் நடன நிகழ்ச்சிக்கு ஒப்பந்த முறையில் நடிகைகள் மற்றும் சின்னத்திரை நடிகைகள் பலரை மும்பை வழியாக துபாய்க்கு அழைத்து சென்று அங்குள்ள நட்சத்திர ஓட்டல்களில் தங்கவைத்து மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு வருவது தெரிய வந்தது.
அந்த வகையில், கேரளாவைச் சேர்ந்த 21 வயது நடன கலைஞரான இளம்பெண் ஒருவர் ஓராண்டு ஒப்பந்தப்படி துபாய்க்கு அழைத்து சென்று ஓட்டல் அறையில் அடைத்து ைவத்து இரவு நேரங்களில் பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்பட்டுள்ளார். அந்த நடன கலைஞர் ஓட்டலில் பணியாற்றும் ஊழியர்கள் உதவியுடன் ஓட்டலில் இருந்து தப்பியுள்ளார். பிறகு துபாயில் உள்ள அவசர தொலைபேசி எண்:999க்கு தொடர்பு கொண்டு அங்குள்ள காவல்துறை உதவியை அவர் நாடியுள்ளார். பிறகு அந்நாட்டு காவல்துறை பாதிக்கப்பட்ட நடன கலைஞரான இளம் பெண்ணை துபாயில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதை தொடர்ந்து இந்திய தூதரக அதிகாரிகள் உதவி மூலம் சென்னைக்கு பாதிக்கப்பட்ட இளம்பெண் வந்துள்ளார். பிறகு விசாரணை அதிகாரியான துணை கமிஷனர் வனிதா மற்றும் உதவி கமிஷனர் ராஜலட்சுமியிடம் நடந்த சம்பவத்தை தனி புகாராக பாதிக்கப்பட்ட கேரள பெண் அளித்தார்.
அவரிடம் விபசார தடுப்பு பிரிவு போலீசார் துபாயில் நடந்த சம்பவம் குறித்து 3 மணி நேரம் விசாரணை நடத்தி வாக்குமூலமும் பெற்றுள்ளனர். பாதிக்கப்பட்ட கேரள பெண் அளித்த வாக்குமூலத்தின்படி, குறும்பட இயக்குநரான மடிப்பாக்கத்தை சேர்ந்த பிரகாஷ் ராஜ் (24), தென்காசி மாவட்டம் இலஞ்சி பகுதியை சேர்ந்த ஜெயகுமார் (40), சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்த ஆபியா (24) ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணை குறித்து மத்திய குற்றப்பிரிவு உயர் அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த குறும்பட இயக்குநரான பிரகாஷ் ராஜ், துபாயில் கலை நிகழ்ச்சி ஒன்று நடத்த உள்ளதாகவும், அதற்காக சமூக வலைத்தளத்தில் விளம்பரம் செய்து அதன் மூலம் தொடர்பு கொண்ட நடன கலைஞர்கள் மற்றும் துணை நடிகைகள் பலர் வேளச்சேரியில் உள்ள ஒரு இடத்திற்கு நேரில் வரவழைத்து, துபாயில் நட்சத்திர ஓட்டல்களில் பாலியல் தொழில் செய்யும் கேரளாவை சேர்ந்த ஷகீல் (48) என்பவரை சந்திக்க வைத்துள்ளனர்.
அவர் நேர்காணல் நடத்தி அதன் மூலம் 6 மாத ஒப்பந்தப்படி ஒவ்வொரு வாரமும் 4 இளம் பெண்களை துபாய்க்கு அனுப்பியுள்ளனர். தமிழ் தெரியாத பெண்களிடம் தமிழில் தயாரிக்கப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்து மற்றும் கைரேகைகள் பெற்றுள்ளனர். ஆங்கிலம் தெரியாத பெண்களிடம் ஆங்கிலத்திலும் ஒப்பந்தம் பெற்றுள்ளனர். ஒப்பந்தம் பெற்ற இளம்பெண்களுக்கு முதற்கட்டமாக ரூ.1 லட்சம் முதல் ரூ. 2 லட்சம் வரை முன்பணம் கொடுத்துள்ளனர். ஆனால் அந்த ஒப்பந்தத்தில் ‘வாங்கிய கடனுக்காக 6 மாதம் பணியாற்ற மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டு துபாய் செல்கிறேன்’ என்று மோசடி செய்துள்ளனர். இதுபோல் ஒவ்வொரு மாதமும் 2 முறை சின்னத்திரை நடிகைகள் மற்றும் துணை நடிகைகளை அனுப்பி வைத்துள்ளனர். இது தெரியாமல் மும்பை வழியாக துபாய்க்கு அனுப்பி வைக்கின்றனர்.
அதன்படி துபாய் சென்ற இளம்பெண்களை, நேர்காணல் எடுத்த கேரளாவை சேர்ந்த ஷகீல் அவரது தோழி உள்பட 4 பேர் துபாய் விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுத்து வரவேற்கின்றனர். அதன் பிறகு இளம்பெண்களை ஷகீலின் தோழி எந்தெந்த நட்சத்திர ஓட்டலுக்கு யாரை அனுப்புவது என்று அழகுபடி தரம்பிரித்து அழைத்து செல்கிறார். அதன்படி ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு கேரளாவை சேர்ந்த நடன கலைஞரான இளம் பெண்ணை அழைத்து சென்று, அவரிடம் இருந்து செல்போன், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை வாங்கி வைத்துக்கொண்டு ஒரு அறையில் அடைத்துள்ளனர். அந்த அறையில் இதுபோல் நடன நிகழ்ச்சிக்கு என்று அழைத்து வரப்பட்ட ஓரிரு திரைப்படங்களில் நடித்து தற்போது வாய்ப்பு கிடைக்காத நடிகைகள், துணை நடிகைகள், சின்னத்திரை நடிகைகள் என 50 பேர் அடைத்து வைத்து இருந்தது கண்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
உடனே துபாயில் வரவேற்ற ஷகீலின் தோழியிடம் கேட்டதற்கு, நீங்கள் வாங்கிய கடனுக்காக 6 மாதம் நட்சத்திர ஓட்டலுக்கு வரும் விஐபிக்களுடன் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு மறுத்த அவரை அவர்கள் அடித்து, உனது பாஸ்போர்ட் எங்கள் கையில் இருக்கிறது. நாங்கள் சொல்வது போல் நடந்தால் 3 மாதத்தில் உன்னை அனுப்பி விடுகிறோம். இல்லையேன்றால் நீ பல ஆண்டுகள் இங்கையே இருக்க வேண்டிய நிலை இருக்கும் என்று கூறியுள்ளார். பிறகு வேறு வழியின்றி பாலியல் தொழிலில் ஈடுபட வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் பிரபலமாகி, 100 நாள் நிகழ்ச்சி தொடரில் நடத்த நடிகை உள்பட பல நடிகைகள் துபாயில் சிக்கியுள்ளதாகவும் விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
2 மாதங்களாக ரகசிய விசாரணை
பாலியல் புரோக்கர் ஷகீல் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்த போது, அவர் நடிகைகள் தொடர்பான தகவல்கள் மற்றும் வங்கி கணக்கு தொடர்பான தகவல்களை அழித்து இருந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து விபசார தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்யப்பட்ட கேரளா புரோக்கர் ஷகீல் பயன்படுத்திய செல்போனில் இருந்து அழிக்கப்பட்ட தகவல்களை எடுக்க, தடயவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பல முன்னணி நடிகைகள் இருப்பதால் விபசார தடுப்பு பிரிவு அதிகாரிகள் வெளியே கசியாமால் கடந்த 2 மாதங்களாக ரகசியமாக கையாண்டு வருகின்றனர். மேலும், இந்த வழக்கில் பல கோடி ரூபாய் சட்டவிரோதமாக துபாயில் இருந்து பாலியல் புரோக்கர்கள் மற்றும் நடிகைகளுக்கு பணம் அனுப்பட்டுள்ளதால், அது தொடர்பாக விசாரணையும் அமலாக்கத்துறை விரைவில் தொடங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் துபாயில் சிக்கியுள்ள நடிகைகள் உள்பட 50க்கும் மேற்பட்டோரை மீட்க இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், துபாயில் உள்ள பெண் புரோக்கர் உள்பட 3 பேரை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கை என்ஐஏ கண்காணித்து வருவதால் மிகுந்த கவனத்துடன் விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கலைநிகழ்ச்சி என ஏமாற்றி பாலியல் தொழில் தள்ளினர்
துபாயில் பாலியல் தொழில் நடத்தும் ஷகீல், அவரது தோழி உள்பட 4 பேரை பிடிக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் விபசார தடுப்பு பிரிவு அதிகாரிகள் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். அதன்படி துபாயில் இருந்து திருவனந்தபுரம் வந்த பிரபல பாலியல் புரோக்கர் ஷகீலை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து, விபசார தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், சினிமா நடிகைகள் பலரை தொலைக்காட்சி கலை நிகழ்ச்சி என ஏமாற்றி அழைத்து சென்று அங்கு, பணத்தாசை காட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதுபோல் கடந்த ஓராண்டில் மட்டும் 70க்கும் மேற்பட்ட நடிகைகள் மற்றும் சின்னத்திரை நடிகைகளை துபாய்க்கு அழைத்து சென்று பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. நடிகை மற்றும் இளம் பெண்களை பிடித்து கொடுக்கும் புரோக்கராக சில நடிகைகள் உதவியுள்ளனர். அதற்காக அவர்களுக்கு துபாயில் உள்ள புரோக்கர்கள் மூலம் கோடிக்கணக்கில் பணம் அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தியதும் அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்துள்ளது.
The post துபாய் நட்சத்திர ஓட்டல்களில் பிரபல நடிகைகள் உள்பட 50 இளம்பெண்கள் சிக்கி தவிப்பு appeared first on Dinakaran.