திருத்தணியில் அட்டூழியம் பிச்சைக்காரர், மூதாட்டியை தாக்கி பணம், செல்போன் பறிப்பு: வழிப்பறி ஆசாமிகளுக்கு வலை


திருத்தணி: திருத்தணியில் இன்று அதிகாலை நடந்து சென்ற மாற்றுத்திறனாளி யான பிச்சைக்காரர் மற்றும் மூதாட்டியை சரமாரி தாக்கி பணம், செல்போன் பறித்து தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது‌. இதில் படுகாயமடைந்த மூதாட்டி மற்றும் பிச்சைக்காரர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருத்தணியில் கடந்த சில நாட்களாக வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, தனியாக இருசக்கர வாகனங்களில் செல்லும் பெண்கள், முதியவர்களை குறிவைத்து வழிப்பறி திருடர்கள் கைவரிசை காட்டி வருகின்றனர். 2 நாட்களுக்கு முன்பு ஆடிக்கிருத்திகை விழாவில், பணியில் ஈடுபட்டிருந்த வருவாய் ஆய்வாளர் கமல் என்பவரின் விலை உயர்ந்த பைக் திருடுபோனது. இந்நிலையில் இன்று அதிகாலை திருத்தணி பழைய தர்மராஜா கோயில் சாலையில் நடந்து சென்ற பிச்சைக்காரர் மற்றும் மூதாட்டியை மர்ம நபர்கள் 2 பேர் கல்லால் சரமாரி தாக்கி பிச்சைக்காரர் கையில் வைத்திருந்த 5 ஆயிரம் ரூபாய் மற்றும் செல்போனை பறித்துள்ளனர். மூதாட்டி காதில் அணிந்திருந்த மூக்குத்தியை பறிக்க முயன்றபோது கூச்சலிட்டதால் சத்தம்கேட்டு, அந்த பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் ஓடிவந்தனர். அவர்களை பார்த்ததும் வழிப்பறி திருடர்கள் தயாராக நிறுத்தி வைத்திருந்த பைக்கில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பினர்.

இதையடுத்து படுகாயமடைந்த இருவரையும் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருத்தணி போலீசார் விசாரித்தபோது, திருப்போரூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி பலராமன் (48) என்பதும் திருத்தணியில் பிச்சை எடுத்து தர்மராஜா கோயில் பகுதியில் இரவு நேரத்தில் தங்கி இருப்பதும், திருத்தணி எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த குப்பம்மாள் (65) வீட்டு வேலை செய்துவருவதும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பிச்சைக்காரர் மற்றும் மூதாட்டியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட ஆசாமிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திருத்தணியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post திருத்தணியில் அட்டூழியம் பிச்சைக்காரர், மூதாட்டியை தாக்கி பணம், செல்போன் பறிப்பு: வழிப்பறி ஆசாமிகளுக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: