தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடித்தது மற்றும் துணிமணிகள் விற்பனை பாலித்தீன் பைகள் என தஞ்சாவூர் மாநகராட்சியில் மட்டும் சுமார் 220 டன் குப்பை அப்புறப்படுத்தும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சாதாரணமாக நாளொன்றுக்கு 110 டன் குப்பை வரும் நிலையில் 220 டன் அளவிற்கு சேர்ந்துள்ளது.
தஞ்சாவூர் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் இருந்து வருகிறது. மாநகராட்சியை பொறுத்தவரை எப்பொழுதும் வழக்கமாக நாளொன்றிற்கு 51 வார்டுகளிலிருந்தும் சுமார் 110 முதல் 120 டன் குப்பைகள் சேகரமாகும். மாநகராட்சியில் இருந்து வரும் 51 வார்டுகளிலும் சேகரிக்கக் கூடிய குப்பைகள் ஜெபமாலைபுரம் குப்பை கிடங்கில் சேர்க்கப்பட்டு அங்கிருந்து மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரிப்பது வழக்கம்.
தற்போது கடந்த இரண்டு நாட்களாக தீபாவளி விற்பனை மாநகரம் முழுவதும் நடைபெற்றது. இதனை அடுத்து திடக்கழிவு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவு நகர் முழுவதும் குவிந்துள்ளன. அதிலும் பட்டாசு வெடித்தது மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் என வழக்கத்தை விட கூடுதலாக 110 டன் அளவிற்கு குப்பை என்பது சேகரமாகியுள்ளது. தஞ்சாவூர் மாநகர் முழுவதும் குப்பைகளை தூய்மை செய்ய 500 துப்புரவு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் 40 கனரக வாகனங்கள் குப்பை அள்ளி
செல்வதற்காக பயன்படுத்தப்பட்டு தூய்மை பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் மாநகர் முழுவதும் தூய்மை செய்யக்கூடிய பணிகள் இன்று நிறைவடையும் என கூறப்படுகிறது.கும்பகோணம்: கும்பகோணத்தில் உச்சிப்பிள்ளையார் கோயில்தெரு, நாகேஸ்வரன்கோயில் வடக்கு வீதி, ஆயிகுளம் ரோடு, மடத்து தெரு, நால்ரோடு, மகாமககுளம், சாரங்கபாணி கோயில் கீழ சன்னதி ஆகிய இடங்களில் 500க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் வெளியூர் சிறு வியாபாரிகள் தற்காலிக தரைக்கடைகளை அமைத்தனர். இந்த கடைகளில் பொருட்கள் வாங்குவதற்காக கடந்த ஐந்து நாட்களில் லட்சக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கும்பகோணத்திற்கு வந்து சென்றுள்ளனர்.
குறிப்பாக, தீபாவளி பண்டிகைக்கு முன்தினமான கடந்த 11ம் தேதி பொதுமக்கள் தற்காலிக தரைக்கடைகளில் தங்களுக்கு வேண்டிய விழாக்கால பொருட்களை வாங்க அலைகடலென குவிந்தனர். இதனால் கும்பகோணம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் குப்பை கழிவுகள் அதிக அளவு சேர்ந்தது. குறிப்பாக, தீபாவளி தினமான 12ம் தேதி தீபாவளி வியாபாரம் முடிந்து வியாபாரிகள் ஊருக்கு திரும்பிய நிலையில் அன்று காலை முதல் கும்பகோணத்தில் முக்கிய வீதிகளில் டன் கணக்கில் கழிவுகள் அதிக அளவில் தேங்கி கும்பகோணம் மாநகரம் குப்பை கிடங்கு போல் காட்சி அளித்தது. குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகள் அதிகஅளவில் இருந்தன.
சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் உடல்நலம் மற்றும் இயற்கைக்கு பல்வேறு கேடுகள் இருப்பதாலும், மேலும் தீபாவளிக்கு மறுநாள் இப்பகுதியில் வியாபாரம் துவங்கிவிடும் என்ற காரணத்தினாலும் இதனை உடனடியாக அகற்ற கும்பகோணம் மாநகராட்சி முடிவு செய்தது.
இதையடுத்து முன்னதாக மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் சு.ப.தமிழழகன் மற்றும் பொது சுகாதார குழுவினர் ஆலோசனையின்பேரில், ஆணையர் லெட்சுமணன் உத்தரவின்படி கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்று, உடனடியாக பொதுமக்களிடம் தொற்றுநோய் ஏதும் பரவாமல் தடுக்க குப்பைகளை அகற்றும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து களத்தில் இறங்கிய மாநகர் நல அலுவலர் பிரேமா தலைமையிலும், துப்புரவு அலுவலர் பாலசுப்பிரமணியன், ஆய்வாளர்கள் அருண் பிரபாகர் மற்றும் மணிகண்டன் ஆகியோர் முன்னிலையிலும் பண்டிகை கால கொண்டாட்டத்தில் இருந்த சுமார் 350 துப்புரவு தொழிலாளர்கள் தங்களது குடும்ப கொண்டாட்டங்களை கைவிட்டு 35க்கும் மேற்பட்ட சரக்கு வேன்களுடன் தயாராகினர். தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை தீபாவளி அன்று காலை 9 மணிக்கு தொடங்கிய இப்பணி நேற்று திங்கட்கிழமை மாலை 7 மணி வரை மாநகரின் வீதிகளில் நடந்தது. இதில் சுமார் 293 டன்னுக்கும் மேற்பட்ட கழிவுகள் அகற்றப்பட்டு மாநகராட்சி குப்பைக் கிடங்கிற்கு அனுப்பப்பட்டது.
The post தஞ்சாவூர், கும்பகோணம் மாநகராட்சி வார்டு பகுதிகளில் 500 டன் குப்பை, கழிவுகள் அகற்றம் appeared first on Dinakaran.