எம்எல்ஏக்களுக்கு செக்: காங்கிரசில் இது புதுசு

நாகர்கோவில்: வருகின்ற 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் முதற்கட்டப் பணிகளை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தொடங்கியுள்ளது. வேட்பாளர் விருப்ப மனுக்கள் 234 தொகுதிகளுக்கும் கட்சி உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளன. சுமார் 10,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு மற்றும் தொகுதி நிலவரங்களை ஆய்வு செய்ய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மேலிடப் பார்வையாளர்களை நியமித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான மூத்த தேர்தல் பார்வையாளர்களாக முகுல் வாசினிக், உத்தம் குமார் ரெட்டி (தெலங்கானா அமைச்சர்) மற்றும் குவாசி முகமது நிசாமுதீன் ஆகியோரை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நியமித்துள்ளார்.

இவர்கள் மாநில கட்சித் தலைமையுடன் இணைந்து மாவட்ட மற்றும் தொகுதி வாரியாகச் சென்று, கட்சியின் அடிமட்ட நிலை, வாக்குச் சாவடி குழுக்களின் செயல்பாடுகள் மற்றும் கள நிலவரங்களை ஆய்வு செய்கின்றனர். முன்னதாக தொகுதிகளில் வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்கள் யார் என்பது குறித்து உள்ளூர் நிர்வாகிகளிடம் இவர்கள் நேரடியாகக் கருத்து கேட்டு வருகின்றனர்.

குமரி மாவட்டத்திற்கு மேலிடப் பொறுப்பாளர் நிவேதித் ஆல்வா நியமிக்கப்பட்டு சட்டமன்ற தொகுதி வாரியாக கருத்து கேட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார். தற்போதுள்ள எம்.எல்.ஏ.க்கள் தொடரலாமா, அவர்களுக்கு செல்வாக்கு எப்படி உள்ளது, புதியவர்களை நியமிக்கலாமா என்ற அடிப்படையில் இந்த கருத்துகேட்பு நடைபெறுவதாகவும், காங்கிரஸ் கட்சியில் இந்த நடவடிக்கை புதியது என்றும், வரவேற்க தக்கது என்றும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related Stories: