போலீசாருக்கு 8 மணி நேரம் வேலையை அமல்படுத்த வழக்கு: அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: போலீசாருக்கு 8 மணி நேர வேலை வழங்கக் கோரிய வழக்கில், அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. காவலர் குடும்ப நல அறக்கட்டளை தலைவர் சத்யபிரியா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,

‘‘தமிழ்நாட்டிலுள்ள பட்டாலியன் காவல் துறையினருக்கு கடந்த 2010 முதல் 2025 வரை ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பாக விரிவான ஆய்வு நடத்தி அறிக்கையளிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், நிபுணர்கள் குழுவை அமைக்குமாறும், அறிக்கையடிப்படையில் பட்டாலியன் போலீசாரை, சட்டம், ஒழுங்கு காவல்துறையினரோடு இணைத்து பயன்படுத்துவது தொடர்பாக முடிவு எடுக்குமாறும், போலீசாருக்கு 8 மணி நேர வேலை, பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறையை அமல்படுத்துமாறும் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் சக்திராவ் ஆஜராகி, ‘‘பட்டாலியன் காவல்துறையினருக்கான சீருடையைக் கூட ஒரு குறிப்பிட்ட கடையில் தான் வாங்க வேண்டும் என நிர்பந்திக்கப்படுகின்றனர்.

தரமற்ற உணவு வழங்கப்படுகிறது. பிரிட்டிஷ் காலத்தில் கொண்டு வரப்பட்ட பட்டாலியன் காவல்துறை நடைமுறை பிற மாநிலங்களில் நடைமுறையில் இல்லாத போது, தமிழ்நாட்டில் மட்டுமே நடைமுறையில் உள்ளது’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், மனு தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜன. 28க்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: